முகப்பு
தமிழ்நாடு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள்

சென்னை, மார்ச் 3: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவையில் இந்த மாநாடு வரும் ஜூன் 23 முதல் 27}ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கே

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:58 PM
பகிர்:

சென்னை, மார்ச் 3: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோவையில் இந்த மாநாடு வரும் ஜூன் 23 முதல் 27}ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மாநாட்டு ஏற்பாடுகளையும், போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக நிறைவேற்றவும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதை ஏற்கும் வகையில், கோவை} திருப்பதிக்கு (சேலம் வழி) இன்டர்சிட்டி விரைவு ரயில் வாரம் 3 முறையும், சென்னை} கோவை பகல் நேர "துரந்தோ' விரைவு ரயில் சேவையும் இயக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏற்கெனவே கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவைக்கு உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் முக்கிய ரயில்கள், கோடை சிறப்பு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து என கோவை வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூர்} இருகூர் 2}வது அகலப் பாதை: கோவை} இருகூர் இடையே (24 கிலோமீட்டர்)2}வது அகலப் பாதை ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

தற்போது இந்தப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இத்திட்டத்தின் நிலுவைப் பணிகளை நிறைவேற்ற ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்து ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போத்தனூர் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மட்டும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தேவையான நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைத்தால் மட்டுமே கோவை } இருகூர் 2}வது அகலப் பாதைப் பணிகளை நிறைவேற்ற முடியும்.

இதன்பின்னரே கோவை உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க முடியும் என்று தமிழக அரசிடம் தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

பொதுவாக ரயில்களில் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

எனவே, சிறப்பு ரயில் சேவைகளை விரைவாக தெற்கு ரயில்வே அறிவிக்க வேண்டுமெனில், அகலப் பாதை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாநில அரசு தரப்பில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

சிறப்பு விரைவு பஸ்கள்: மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கோவைக்கு சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.