உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல 50 "ஏ.சி. வால்வோ' பஸ்கள்
சென்னை, மார்ச் 4: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல 50 "ஏ.சி. வால்வோ' பஸ்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உலகத் தமிழ் செம்மொ
சென்னை, மார்ச் 4: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல 50 "ஏ.சி. வால்வோ' பஸ்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் 23}ம் தேதி முதல் 27}ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும், தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வரவுள்ளனர்.
இவர்களின் பயன்பாட்டுக்காக தனித்தனி வாகனங்கள் மற்றும் கார்களை பயன்படுத்துவது போக்குவரத்து நெரிசலையும், அதிக செலவையும் ஏற்படுத்தும் என்பதால் "ஏ.சி. வால்வோ' பஸ்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பிரதிநிதிகளுக்கு என்று பிரத்யேகமாக இயக்கப்படும் இந்த பஸ்களில், அவர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Advertisement
இந்த பஸ்கள் இப்போது சென்னையிலும் தமிழகத்தின் மற்ற சில பகுதிகளிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 50 பஸ்கள், கோவைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
பிரதிநிதிகள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து, மாநாடு நடைபெறும் இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மாநாடு தொடங்குவதற்கு 4 நாள்களுக்கு முன்பே இந்த ஏ.சி. பஸ்கள் கோவை கொண்டு செல்லப்பட்டு இயக்கப்பட உள்ளன.
மாநாட்டுக்கு முன்பும், மாநாட்டுக்குப் பின்னும் உதகை உள்ளிட்ட கோவையைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கும் பிரதிநிதிகளுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து மாநாட்டுக்குச் செல்ல விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
20 ஆயிரம் பஸ்களில் மாநாட்டு இலச்சினை ஸ்டிக்கர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறியும் வகையில் விளம்பரப்படுத்துவதற்காக, தமிழகத்தில் இயக்கப்படும் 20 ஆயிரம் அரசு பஸ்களிலும் "மாநாட்டு இலச்சினை' ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. பஸ்ஸின் இரண்டு பக்கவாட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பஸ் டிக்கெட்களிலும் இலட்சினை அச்சிடப்படும். மாநாடு முடியும் வரை இந்த நடைமுறை தொடரும்.
மாநாட்டை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் சாலை வசதி, கூடுதல் பஸ் வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த வகையில் மேம்படுத்தப்படுகின்றன என்றார்.