முகப்பு
தமிழ்நாடு

இழந்ததை மீட்கத் துடிக்கும் பா.ம.க.

சென்னை, மார்ச் 14: கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியின் மூலம் தமது கட்சியின் செல்வாக்கில் ஏற்பட்ட இழப்பை, பென்னாகரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்ற துடிப்போடு பாட்டாளி மக்கள் க

தமிழ்நாடு

இழந்ததை மீட்கத் துடிக்கும் பா.ம.க.

சென்னை, மார்ச் 14: கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியின் மூலம் தமது கட்சியின் செல்வாக்கில் ஏற்பட்ட இழப்பை, பென்னாகரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்ற துடிப்போடு பாட்டாளி மக்கள் க

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:05 PM
பகிர்:

சென்னை, மார்ச் 14: கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியின் மூலம் தமது கட்சியின் செல்வாக்கில் ஏற்பட்ட இழப்பை, பென்னாகரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்ற துடிப்போடு பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

வன்னியர் இன மக்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக 1989}ல் உதயமான வன்னியர் சங்கம், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறியது. முதன் முதலில் 1991 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்கள் பலவற்றில் கணிசமாக வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றது. பின்னர் 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 4 தொகுதிகளைக் கைப்பற்றியது.

1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்த பா.ம.க. 4 தொகுதிகளில் வென்று, நாடாளுமன்றத்திலும் நுழைந்தது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழகத்தில் பா.மக. இடம்பெற்ற கூட்டணியே வெற்றி பெற்றது. எனவே, பா.ம.க. உள்ள அணியே இனி தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என கூறும் அளவுக்கு அக்கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது.

எனினும், 2009 மக்களவைத் தேர்தலில் பா.ம.க. இடம்பெற்ற அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தது. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பா.ம.க. தோல்வியடைந்தது.

அப்போது, தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், "தி.மு.க.வின் வெற்றியைவிட, பா.ம.க.வின் தோல்விதான் அதிகம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் பா.ம.க.வின் அரசியல் பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

பா.ம.க.வுக்கு ஏற்பட்ட இந்த அரசியல் பின்னடைவு அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து, கட்சித் தொண்டர்களைச் சந்தித்தனர்.

"முந்தைய சட்டப்பேரவை தேர்தல் ஒன்றில் கட்சித் தலைவர் கருணாநிதி போட்டியிட்ட ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வியடைந்தது. இன்னொரு பொதுத்தேர்தலில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியிலேயே அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இந்திரா காந்தி, காமராஜர் போன்ற அரசியல் ஜாம்பாவான்கள் கூட தேர்தலில்

தோல்வியடைந்துள்ளனர். எனவே, ஒரேயொரு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மட்டுமே பா.ம.க. அழிந்துவிடாது. தமிழக அரசியல் களத்தில் தனது செல்வாக்கை பா.ம.க. மீண்டும் தூக்கி நிறுத்தும்" என தொண்டர்களுக்கு தெம்பூட்டினார் ராமதாஸ்.

பென்னாகரம் தேர்தல்: இதற் கி டையே 2006}ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் இதுவரை 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அத்தேர்தல்கள் அனைத்திலும் ஒதுங்கியே இருந்த பா.ம.க., வரும் 27}ம் தேதி நடைபெற உள்ள பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.

பா.ம.க. உருவான பின் நடைபெற்ற 1991 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் என்.எம். சுப்பிரமணியம், 32 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பின்னர் 1996 தேர்தலிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிட்ட போது, அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 2001 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்ற போது, இத்தொகுதியில் ஜி.கே. மணி இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார்.

2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது. அப்போது பென்னாகரத்தில் தி.மு.க. போட்டியிட்டதால், பா.ம.க. போட்டியிடவில்லை.

இந்நிலையில், இப்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பென்னாகரத்தில் தங்கள் கட்சிக்குள்ள கணிசமான செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றி பெற்றாக வேண்டும். இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் பா.ம.க. யாராலும் தவிர்க்க முடியாத சக்தி என்ற நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்போடு இப்போது பா.ம.க. செயல்பட்டு வருகிறது.

தேர்தல் வியூகம்: பென் னா கரம் தொகுதியின் சுமார் 2 லட்சம் வாக்காளர்களில், ஒவ்வொரு வாக்காளரின் ஆதரவையும் தங்கள் கட்சிக்குத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்தோடு, தேர்தல் வியூகம் அமைத்து, பா.ம.க. செயல்படுகிறது.

ஒவ்வொரு 100 வாக்காளருக்கும் ஒரு களப் பணியாளர் வீதம், 2 ஆயிரம் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பணியாளர்களை ஒருங்கிணைக்க 30 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு பொறுப்பாளர் என்ற வகையில், அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் இப்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை தவிர, தொகுதி முழுவதையும் சுற்றி வரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள், மொத்தமுள்ள 48 பஞ்சாயத்துகளில், குறிப்பிட்ட பஞ்சாயத்துகளை தங்கள் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு தேர்தல் பணி செய்கின்றனர். குறிப்பாக, பா.ம.க. நிறுனவர் ராமதாஸ், தனக்கென 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல், அக்கட்சித் தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி, காடுவெட்டி குரு, வேல்முருகன் உள்ளிட்டோரும் தலா 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டு தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பா.ம.க.வின் பணிகள் குறித்து அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது: எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த 3 மாதங்களாக தொகுதியின் அனைத்து கிராமங்கள், அனைத்து வீதிகளுக்கும் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். மேலும் எங்கள் களப்பணியாளர்கள் மூலம், ஒவ்வொரு வாக்காளரையும் இதுவரை 30 தடவைக்கு மேல் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளோம். வன்னிய மக்களுக்கு ராமதாஸ் செய்த சாதனைகள் மற்றும் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியால் சந்தித்த வேதனைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி வருகிறோம். எனவே, தி.மு.க.வின் பணபலத்தையும் மீறி, நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

பென்னாகரத்தில் வெற்றி பெற்றே தீருவது; இல்லாவிட்டால் இரண்டாம் இடத்தையாவது பெறுவது; இதன் மூலம் கடந்த மக்களவைத் தேர்தலில் இழந்த கட்சியின் செல்வாக்கை மீட்டெடுப்பது என்ற உறுதியோடும், துடிப்போடும் பா.ம.க.வினர் செயல்பட்டு வருகின்றனர்.

பா.ம.க.வினரின் இப்போதைய உழைப்புக்கேற்ற பலன் கிடைக்குமா என்பது இம்மாத இறுதியில் தெரிந்துவிடும்.

முழு கட்டுரையைப் படிக்க →