சென்னை, மார்ச் 24: சென்னையை அடுத்த செங்கல்பட்டில் மாற்றுத் திறுனுடைய 10-ம் வகுப்பு மாணவர் ஐயப்பன் (15) (படம்), சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படாததால் தேர்வு எழுத முடியாமல் அவதியுற்று வருகிறார்.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான துறையை ஏற்படுத்தியுள்ள முதல்வர் கருணாநிதி, போலியோ பாதித்த நிலையில் 85 சதவீதம் உடல் ஊனமுற்ற மாணவர் ஐயப்பனுக்கு சிறப்பு ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நாதமுனியின் மகன் ஐயப்பன். அங்குள்ள அறிஞர் அண்ணா நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். உடல் ஊனமுற்ற ஐயப்பனை, அவரது தந்தையோ, தாயோ தோளில் சுமந்துதான் பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வந்தனர்.
அவர் 85 சதவீத உடல் ஊனமுற்றவர். அவருக்கு கைகளும் சிறிது வளைந்துள்ளதால், அவரால் முழு அளவில் தேர்வு எழுத முடியாது என்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மார்ச் 23-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிவிட்டது. இந்த மாணவருக்கு சிறப்பு ஆசிரியரை நியமிக்கக் கோரி முயற்சிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர் தவறாக சான்றிதழ் அளித்ததால், அந்த விண்ணப்பம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐயப்பனுக்கு, சிறப்பு ஆசிரியரை நியமிப்பதில் கடைசி நேரத்தில் சிக்கலானது.
சிரமங்களுக்கு இடையே தேர்வெழுதி வரும் மாணவர்: இருந்தபோதிலும் தேர்வு எழுத மிகவும் சிரமப்படும் ஐயப்பன், மனம் தளராமல் மார்ச் 23-ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினார். தேர்வு மையத்தில் அவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இருந்தாலும் அவர் மிகவும் மெதுவாக தேர்வு எழுதியுள்ளார்.
இதற்கிடையில் புதன்கிழமை நடந்த தமிழ் 2-ம் தாள் தேர்வையும், அவரே சிரமப்பட்டு எழுதியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஆவதே விருப்பம்: இதுதொடர்பாக, மாணவர் ஐயப்பன் கூறியது: எனக்கு சிறப்பு ஆசிரியரை நியமித்தால் பேருதவியாக இருக்கும். தேர்வு எழுத மிகவும் சிரமப்படுகிறேன். கூடுதலாக ஒரு மணி நேரம் இருந்தபோதிலும், என்னால் முழுமையாகத் தேர்வு எழுத முடியவில்லை. மெதுவாகவே எழுத முடிகிறது.
இன்னும் ஆங்கிலம் 2 தாள்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து தேர்வுகள் மீதம் உள்ளன. அத்தேர்வுகளை எழுத சிறப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அரசு உதவி செய்தால் தொடர்ந்து சிறப்பாகப் படிப்பேன். சிறப்பாகப் படித்து, ஆட்சியராவதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.
÷கல்வித்துறை அதிகாரிகளின் விளக்கம்: 'மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு ஆசிரியரை நியமிப்பது தொடர்பாக அந்தந்த தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்படும். வழக்கமாக நவம்பர் மாதம் இப்பணி நடைபெறும். பின்னர் அரசு தேர்வுத்துறை இயக்குநர் மூலம் சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவர். முதலில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குதான் இக்கணக்கெடுப்பு நடைபெறும். தொடர்ந்து அவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுத இது உதவும்.
எனவே தேர்வு தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாகக் கூட தலைமை ஆசிரியர் பரிந்துரை செய்யும்பட்சத்தில், சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவர். மேலும் 60 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுற்றோராக பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படலாம்.
மாற்றுத்திறனுடைய 10-ம் வகுப்பு மாணவர்கள், கூடுதலாக ஒரு மணி நேரத்துடன் மொத்தம் மூன்றரை மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்' என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
100 சதவீத வருகைப் பதிவு
பள்ளியில் 100 சதவீத வருகைப் பதிவு வைத்துள்ளார் மாணவர் ஐயப்பன். அவர் மீது ஆசிரியர்களும், மாணவர்களும் பிரியத்துடன் பழகி வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐயப்பனுக்கு, அரசு சார்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. ஆனால், அந்த சைக்கிள் துருப்பிடித்த நிலையில் பழையதாக உள்ளது. அதை மாற்றி பாட்டரியால் இயங்கும் புதிய மூன்று சக்கர சைக்கிளை வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.