முகப்பு
தமிழ்நாடு

சுகாதாரமற்ற போக்குவரத்து பணிமனைகள்

திருச்சி, மே4: மிகக் குறைந்த கூலிக்கு ஒப்பந்தப் பணிகள் அளிக்கப்படுவதால், சுகாதாரமின்றிக் காட்சியளிக்கின்றன, திருச்சியிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள். அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மலைக

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:25 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:16 PM

திருச்சி, மே4: மிகக் குறைந்த கூலிக்கு ஒப்பந்தப் பணிகள் அளிக்கப்படுவதால், சுகாதாரமின்றிக் காட்சியளிக்கின்றன, திருச்சியிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள்.

அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மலைக்கோட்டை கிளை பணிமனையில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 10. இதுதவிர, அதிகாரிகளின் அறைகளில் தனித்தனியே. பரந்து விரிந்த பணிமனை.

இங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு அரவானிகளுக்கு ஒப்பந்த வாய்ப்பளிக்கப்பட்டது. மாதத்துக்கு ரூ. 6,600. நான்கு அல்லது 5 பேரை வேலைக்கு வைத்துக் கொண்டால், ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ. 44 கிடைக்கலாம்.

Advertisement

ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட அரவானிகளுக்கு இந்தக் கூலி கட்டுப்படியாகவில்லை. ஒரு வாரத்தில் ஒப்பந்தத்திலிருந்து தங்களை விலக்கிக் கொண்டார்கள்.

மணப்பாறை சாலையிலுள்ள தீரன்நகர் பணிமனையில் மொத்தமாக 21 கழிப்பறைகள். 12 குளியலறைகள். கூடவே பரந்து விரிந்த பணிமனை.650 ஓட்டுநர்- நடத்துநர்களுடன் பணிமனையில் பணியாளர்களும் சேர்த்தால் ஏறத்தாழ 800 பேர் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இந்தப் பணிமனையில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு ரூ. 8,400. இவர் மொத்தத்தில் 8 பணியாளர்களை வைத்து வேலை வாங்க வேண்டுமாம். இந்தக் கணக்குப்படி ஒரு பணியாளருக்கு நாளொன்றுக்கு ரூ. 33 கிடைக்கலாம்.

இந்தத் தொகைக்கு வருமான வரி வேறு பிடிக்கப்படுமாம். மிஞ்சுவது என்ன? பணி செய்த இடத்துக்காக "தர்மகாரியம்' போல மேற்கொண்டு வருகிறார் எனக் குறிப்பிடுகின்றனர் ஓய்வு பெற்ற பணியாளரின் நண்பர்கள்.

மோசமான வாடையும், கறுப்படித்த சுவர்களும் இங்குள்ள கழிப்பறைகளுக்கு அடையாளங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, எல்லா அரசு போக்குவரத்துப் பணிமனைகளும் இப்படித்தான் இருக்கின்றனவாம்.

இதனால் என்ன பிரச்னை? சுகாதாரம் என்றால் என்ன விலை என்றுதான் கேட்க வேண்டியுள்ளது எனப் புலம்புகின்றனர் தொழிலாளர்கள். ஏற்கெனவே கூடுதல் பணி என்ற பெயரில் எங்களுக்கு ஏற்றப்பட்ட சுமையால் அவதிப்படும் நாங்கள், இந்த சுகாதாரக் குறைவால் பெரும் அவதிக்குள்ளாகிறோம் என்றும் குறிப்பிடுகின்றனர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள்.

""இதுதொடர்பாக ஏற்கெனவே போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு கடிதம் அளித்திருக்கிறோம். துப்புரவுப் பணிகள் மோசமாக இருப்பதால், அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். சில இடங்களில் திராவகம், பினாயில் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். சில இடங்களில் அதுவும் இல்லை.

ஒப்பந்தப் போட்டி காரணமாக நாளுக்கு நாள் குறைந்த ஒப்பந்தத் தொகையை குறிப்பிட்டு எடுப்பவர்கள் பின்னாளில் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. பொதுவாக, ஒப்பந்தம் இல்லாமல் நேரடி நியமனம் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு'' என்கிறார் ஏஐடியுசி போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத் தலைவர் மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.