ஈரோடு, மே 5:வங்கிகளில் வாங்கும் கடன், விதை வாங்குவதற்குக் கூட போதுமானதாக இல்லாத நிலையில், பராமரிப்புச் செலவுக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு மஞ்சள் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சாகுபடிச் செலவிற்குப் பணம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் மூலம் பயிர்க்கடன் அளிக்கப்படுகிறது. சாகுபடி செலவினை பொருத்து ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கடன் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.
வேளாண்மைத் துறை, வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு ஒவ்வொரு ஆண்டும் கூடி, தங்கள் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு, அடுத்த நிதியாண்டிற்கான பயிர்க்கடன் அளவு குறித்து முடிவு செய்து, இந்த முடிவுகளை மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பும்.
மாவட்ட குழு அளித்துள்ள பரிந்துரைகளை மாநிலக் குழு பரிசீலனை செய்து இறுதி முடிவினை நிதியாண்டு தொடக்கத்தில் அறிவிக்கும். இதன் அடிப்படையில் வங்கிகள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மாநில குழு பயிர்க்கடன் அளவை முந்தைய ஆண்டைவிட 10 சதவீதம் கூடுதாலக அறிவித்து வந்தது. இதன் அடிப்படையிலேயே பயிர்க்கடன் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையினை ஏற்று ஈரோடு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட பரிந்துரைகள் மாநிலக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பிரதான பயிரான மஞ்சளுக்கு ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம் பயிர்க் கடனாக வழங்க வேண்டும் என்று, மாவட்டக் குழு பரிந்துரை செய்திருந்தது. அண்மையில் வெளியிடப்பட்ட மாநில குழுவின் இறுதி அறிவிப்பில் மஞ்சள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் பயிர்க் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கரில் மஞ்சள் பயிரிட 800 முதல் 1000 கிலோ விதை தேவைப்படும். பவானிசாகர் அரசு விதைப் பண்ணையில், விதை மஞ்சள் விலை கிலோ ரூ.23, வெளிச் சந்தையில் கிலோ ரூ.36. வங்கிகளில் வழங்கப்படும் கடன் விதை வாங்கக் கூட போதுமானதாக இல்லை.
தங்களுடைய நிலத்தில் விளைந்த மஞ்சளை விதைக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இந்த கடன், சாகுபடி செலவிற்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் வெளியில் விதை வாங்கி பயிரிடும் விவசாயிகளை பொருத்தவரை நிலத்தைத் தயார்படுத்தவதற்கு கூட வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க செயலர் தளபதி கூறியது:
அனைத்து மாவட்ட பரிந்துரைகளையும் பெற்று, ஒவ்வொரு பயிருக்கும் எந்த மாவட்டத்திலிருந்து குறைவான பரிந்துரை வந்துள்ளதோ, அதனை மாநிலக்குழு இறுதி செய்கிறது. நீலகிரியில் விளையும் தேயிலைக்கான பயிர்க்கடன் அளவு ஈரோடு மாவட்ட குழு அளிக்கும் அடிப்படையில் இறுதி செய்யப்படுமா?
இதற்கு சாத்தியமில்லை எனில் ஈரோடு மாவட்டத்தின் பிரதான பயிரான மஞ்சளுக்கு, தஞ்சை மாவட்டக்குழு அளித்துள்ள பரிந்துரைப்படி பயிர்க்கடன் அளவு நிர்ணயிப்பதும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது.
மாநில அளவில் இறுதி செய்யப்படும் பயிர்க் கடனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், இம்மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடிக்கு என்ன செலவாகும் என்பதை மாவட்ட நிர்வாகம், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் வரும் ஆண்டுகளில் தன்னிச்சையான முடிவுகளை மாநில தொழில்நுட்பக் குழு எடுக்காது என்றார்.
இது குறித்து கூட்டுறவுத்துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு கூட்டம் நடத்தி பரிந்துரைகளை மாநிலக் குழுவிற்கு அனுப்புவது, மாநிலக்குழு இறுதி செய்த பின் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தெரிவிக்கும் உத்தரவின்படி பயிர்க்கடன் அளவு வழங்குவதை தவிர, பயிர்கடன் நிர்ணயப்பதில் வேறு எந்த பங்கும் தங்களுக்கு இல்லை என்றனர்.
மஞ்சள் பயிர் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் செலவாகும். கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லாமல் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வரும் சூழலில், கடன் அளவை அதிகரித்தால் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெருமளவில் மஞ்சள் பயிரிட வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதன் மூலம் கடனை எளிதில் திருப்பிச் செலுத்த வாய்ப்புள்ளது என்றனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.