முகப்பு
தமிழ்நாடு

கோடை சிறப்பு ரயில்களிலும் நெரிசல்: திணறுகிறது தெற்கு ரயில்வே

சென்னை, மே 8:கோடைகால சிறப்பு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசலை சமாளிக்க முடியாமல் தெற்கு ரயில்வே திணறி வருகிறது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட கா

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:49 PM
பகிர்:

சென்னை, மே 8:கோடைகால சிறப்பு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசலை சமாளிக்க முடியாமல் தெற்கு ரயில்வே திணறி வருகிறது.

குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் ரயில் பயணத்துக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்ட நகரங்களுக்கும், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தினமும் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் பயண நாளுக்கு 90 நாள்களுக்கு முன்பே  முன்பதிவு நிறைவடைந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, நெரிசலை சமாளிக்கும் வகையில் பகுதி பகுதியாக சுமார் 340-க்கும் மேற்பட்ட கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. கடந்த மார்ச் 28 முதல் தொடங்கிய சிறப்பு ரயில் சேவைகள் ஜூன் 16-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

வழக்கம்போல அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே இந்த கோடை சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

கோடையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் தினமும் சராசரியாக 73,000  பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு பயணக் கட்டணம் மூலம் இப்போது நாள் ஒன்றுக்கு கிடைக்கும் வருவாய் ரூ. 2.80 கோடியாக

அதிகரித்துள்ளது. இதில் கோடை சிறப்பு ரயில் சேவைகள் மூலம் மட்டும் இந்த ஆண்டு ரூ. 15 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டப்படும் என்று தெரியவந்துள்ளது.

போலி முகவர்களால்...

இது தவிர போலி முகவர்கள் அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்று பயணிகளைக் கொள்ûளையடித்து வருகின்றனர். இதனால், கோடை கால ரயில்களில் செயற்கை நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பொதுவாக நெரிசலைச் சமாளிக்கும் வகையில், விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். ஆனால், இப்போது ரயில் பெட்டிகளுக்கு தேசிய அளவில் பற்றாக்குறை உள்ளதால் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்து இயக்குவதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அங்காடியாகும் ரயில்களால் அவதி:

பகல் நேரத்தில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களில் திருட்டு வி.சி.டி. முதல் திண்பண்டங்கள் வரை விற்கும் அனுமதி பெறாத வியாபாரிகள் படையெடுக்கின்றனர்.

இதனால், இந்த ரயில்கள் நடமாடும் அங்காடி ரயில்களாக மாறிவிடுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுதவிர அனைத்து ரயில் நிலையங்களிலும்  லாப நோக்குடன் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் கணக்கின்றி தாராளமாக வழங்கப்படுகின்றன.

பொதி மூட்டைகளாகும் பயணிகள்:

இதனால், பொது பெட்டிகளில் பொதி மூட்டைகளாக பயணிகள் திணிக்கப்படுகின்றனர். நெரிசலால் குடிநீர், உணவு எதையும் வாங்க முடிவதில்லை. கழிப்பறைகள் கூட ஆக்கிரமிக்கப்படுவதால், பொதுப் பெட்டிகளில் ஏறும் பயணிகள் நரக வேதனையில் தவிக்க நேருகிறது.

மின் விநியோகம் பாதிப்பு, துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் என பயணிகள் படும் அவதி சொல்லி மாளாது.

சரக்கு ரயில்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை அளிப்பதால் கோடை சிறப்பு ரயில்கள் அறிவிப்பின்றி சாதாரண ரயில் நிலையங்களில் கூட மணிக் கணக்கில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பல மணி நேரம் தாமதமாக இந்த ரயில்கள் ஊர் போய்ச் சேருகின்றன.

இது போன்று பல்வேறு நெருக்கடிகளால் பயணிகள் எரிச்சலுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், புன்னகையுடன் சேவை என்று பெயரளவில் கோஷமிட்டாலும், நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறுகிறது தெற்கு ரயில்வே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.