முகப்பு
தமிழ்நாடு

மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் திருவாரூரில் அமைக்கப்படுமா?

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டத்திற்கு எனத் தனியாக மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், மின் வாரிய அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போது திருவாரூர், நாகப்பட்டின

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:14 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:26 PM

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டத்திற்கு எனத் தனியாக மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், மின் வாரிய அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது திருவாரூர், நாகப்பட்டினம் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து நாகப்பட்டினத்தில் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழில் நிறுவனத்தினர், விவசாயிகள் ஆகியோர் மின் மாற்றி பழுது, மதிப்பீடுகள், தங்களது குறைகளைத் தெரிவிக்க மேற்பார்வைப் பொறியாளரை சந்திக்க நாகை செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

அப்படிச் செல்லும்போது மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகப் பணி, அவசரப் பணிகள் காரணமாக இரு மாவட்டத்தில் உள்ள ஏதோ ஒரு பகுதிக்குச் சென்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் வேறு ஒரு நாளில் மீண்டும் நாகைக்கு பயணம் செய்து பொறியாளரைச் சந்தித்து குறையைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இதனால், கால விரயமும், பொருள் செலவும் ஏற்படுவதால் மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Advertisement

தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட போது நாகையில் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அதேபோல, நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 1996-ல் திருவாரூர் மாவட்டம் உதயமானது.

இதையடுத்து, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட தலைமை நீதிமன்றம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை என அனைத்துத் துறை அரசு அலுவலகங்களும் அமைக்கப்பட்டன. என்றாலும், இது நாள் வரை திருவாரூர் மாவட்டத்திற்கு என்று தனியாக மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படவில்லை.

மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகை, திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களில் ஒரே நாளில் நடைபெறும் போது, திருவாரூர் கூட்டத்தில் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் கலந்து கொள்ள முடியாததால், விவசாயிகள் மின் வாரியம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து உரிய பதிலைப் பெற முடியாத நிலையும் உள்ளது.

தமிழ்நாட்டில் 38 மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை, ஈரோடு போன்ற சில மாவட்டங்களில் நிர்வாக வசதிக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது.

திருவாரூரில் மின் மாற்றி பழுது நீக்கம், மின் மீட்டர் செப்பனிடும் அலுவலகம்,  துணை மின் நிலையங்கள் ஏற்கெனவே அமைந்துள்ளன. அதனால், அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்டத் தலைமையிடமான திருவாரூரில் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் மின் துறை அலுவலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.