திருத்தணி அரசு மகளிர் பள்ளியில் 2000 மாணவிகளுக்கு ஒரே உடற்கல்வி ஆசிரியை
திருத்தணி, செப். 3: திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளாக ஒரே உடற்கல்வி ஆசிரியை பணியாற்றி வருவதால் பள்ளி மாணவிகளின் உடற்கல்வி கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. ÷திருத்தணி ஆறுமு
திருத்தணி, செப். 3: திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளாக ஒரே உடற்கல்வி ஆசிரியை பணியாற்றி வருவதால் பள்ளி மாணவிகளின் உடற்கல்வி கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.
÷திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் தெருவில் இயங்கி வருகிறது மகளிர் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
÷இப்பள்ளியில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு கல்வி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது உடற்கல்வி. இப்பள்ளியை பொருத்த வரையில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியை மட்டும் பணியாற்றி வருகிறார். அவரும் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
÷இப் பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர், 3 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், ஒரே உடற்கல்வி ஆசிரியை மட்டும் பணியாற்றி வருவதால் மாணவிகள் உடற்கல்வி பாடம் மற்றும் விளையாட்டை கற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பணிக்காலம் நீட்டிப்பு பெற்ற ஆசிரியரும் அடுத்து ஆண்டில் ஓய்வு பெறுகிறார். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவிகளையும், விளையாட்டை மட்டுமே எதிர்காலமாக நம்பியிருக்கும் மாணவிகளையும் பயிற்றுவிக்க முறையான உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் மாணவிகளின் உடற்கல்வி கேள்விக் குறியாக இருந்து வருகிறது.
÷தற்போது பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு என எடுக்கும்போது மாணவிகளின் உடற்கல்வி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது: திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை.
÷மேலும் பணி ஓய்வு பெற்று செல்லும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிலாக, புதிய உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதில் தொடர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதுதவிர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் இல்லாமலேயே சிலர் பணிபுரிந்து வருகின்றனர் என அவர் கூறினார்.
÷இதுகுறித்து மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இ.ராமமூர்த்தி கூறும்போது: தற்போது உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றுள்ளது. இன்னும் சில நாள்களில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை தமிழக அரசு நியமிக்க உள்ளது என்றார். இப்பள்ளியில் 9, மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆங்கில பாடம் கற்பிக்க பட்டதாரி ஆசிரியர் ஒருவரே பணியாற்றி வருகிறார். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகள் 850 பேருக்கு தமிழாசிரியர் ஒருவரும், ஆங்கிலத்துக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மேலும் அலுவலக பணி செய்யவும் போதிய அலுவலர்கள் இல்லை என்பது கூடுதல் தகவல்.