அரூர்: தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருந்து வரும் அரூர் மாலிப்டினம் தொழிற்சாலை திட்டம் எப்போது செயல்வடிவம் பெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த அக்ராஹாரம், அ.வெளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரிய வகையான மாலிப்டினம் எனும் தாதுப்பொருள் இருப்பது கடந்த 1970-ம் ஆண்டுகளில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய புவியியல் மற்றும் கனிம வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இங்கு 14.8 அடர்த்திக் கொண்ட மாலிப்டினம் தாதுப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர் வழியாக வேலூர் மாவட்டம் வரையிலும் இந்த மாலிப்டினம் தாதுப் பொருள்கள் இருப்பதும் ஆய்வின்போது தெரியவந்தது.
பூமியில் கிடைக்கும் தாதுப் பொருள்களை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து ஆராய்ச்சி பணிக்கு வழங்கும் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று 3 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வந்தது.
சுரங்கம் அமைக்கும் பணியில் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்து அந்த தனியார் நிறுவனம் தனது பணிகளை பாதியில் நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில், 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதியில் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்கப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரூர் பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக பர்கூரில் தொழிற்சாலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
தொடர்ந்து 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, அரூர் தொகுதி மக்களின் கோரிக்கையின்படி அதே பகுதியில் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தார்.
ஆனால், அறிவிப்போடு சரி. அதற்குப்பின் மத்திய, மாநில அரசுகள் அதற்கான எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மத்திய புவியியல் மற்றும் கனிம வள ஆராய்ச்சி மையமும் தமது ஆய்வு பணிகளை கடந்த ஓராண்டுக்கு மேலாக நிறுத்தி வைத்திருந்தனர். இப்போது மீண்டும் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளனர்.
மாலிப்டினம் பயன்பாடு:
மாலிப்டினம் அதிக வெப்பத்தை தாங்கக்கூடியதும், அதேபோல் வெப்பத்தை விரைந்து வெளியேற்றக்கூடியதுமான உலோகம். விமான மேற்கூரைகள், பீரங்கிகள், துப்பாக்கிகளில் இதனை பயன்படுத்த முடியும். இந்த மாலிப்டினம் தாதுப் பொருள்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் கிடைப்பதை விட அரூர், ஊத்தங்கரை பகுதியில் அதிக அளவில் பூமியில் புதைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்தங்கிய நிலையில் இருக்கும் தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. விவசாயத்தை தவிர பிற தொழில் வாய்ப்புகள் இல்லை. இப்பகுதியில் மானாவரி பயிர் செய்வதையே விவசாயிகள் நம்பியுள்ளனர். இதனால் இங்குள்ள மக்கள் கோவை, பெங்களூர், கேரளம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தொழில், கல்வி, சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்ட மக்கள் வாழ்க்கை தரம் உயர அரூரில் மாலிப்டினம் தொழிற்சாலை அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு.
இது குறித்து தருமபுரி எம்.பி. இரா.தாமரைச்செல்வன் கூறியது:
அரூரில் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் கடந்த மாதம் பேசினேன். இந்த தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.கருணாநிதி, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உதவியுடன் மத்திய அரசை வலியுறுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வேன் என்றார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே வாக்குறுதியாக அறிவிக்கப்படும் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் செயல்வடிவம் பெற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.