முகப்பு
தமிழ்நாடு

ரயிலில் பெண்களுக்கான பெட்டிகளில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

சென்னை : கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளி, கொலை செய்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கான பெட்டிகளில் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளது. கேரளத்தில் உள்ள ஷொரனூர் பகுதியைச் சேர்ந

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:25 PM
பகிர்:

சென்னை : கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளி, கொலை செய்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கான பெட்டிகளில் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளது.

கேரளத்தில் உள்ள ஷொரனூர் பகுதியைச் சேர்ந்தவர் செளமியா (23). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எர்ணாகுளம்- ஷொரனூர் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் கடந்த 1-ம் தேதி தனியாக பயணம் செய்த இவரை, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி, மானபங்கம் செய்துவிட்டு மர்ம நபர் தப்பினார்.

இதன்பின் மீட்கப்பட்ட செளமியா, மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியை போலீஸôர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரளம் மட்டுமன்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பற்ற நிலை ஏன்? பொதுவாக அனைத்து விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்களிலும் கடைசியாக கார்டு வேகனுக்கு (எல்.வி.) அடுத்து பெண்களுக்கான பெட்டி இணைக்கப்படுகின்றது. இந்தப் பெட்டியை அடுத்து பொதுப்பெட்டிகள் தான் பெரும்பாலும் இணைக்கப்படுகின்றன. இந்த பொதுப் பெட்டிகள் எப்போதும் கூட்ட நெரிசல் காரணமாக நிரம்பி வழிகின்றன. இப்போதெல்லாம் லாப நோக்குடன் அதிக அளவில் பயணக் கட்டண வருவாய் ஈட்டுவதற்கு வகையில் ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது.

என்ஜினுக்கு அடுத்து பெண்கள் பெட்டி இணைக்கப்படுமா? ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் முன்பதிவு செய்யாத சாதாரண டிக்கெட்டுகள் கணக்கின்றி வழங்கப்படுகின்றன. இதனால், முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டிகளில் "பொதிமூட்டைகளாக' பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.

இந்த நெரிசலைப் பயன்படுத்தி, ரயில் நிலையங்களில் நின்று, குறைந்த வேகத்தில் ரயில்கள் மீண்டும் புறப்படும்போது, சமுக விரோதிகள் பலர் ஏறுகின்றனர்.

இவர்களை போலீஸôரால் கண்காணிக்க இயலாத நிலை உள்ளது. இதனால், பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்களுக்கான பெட்டியை, ரயிலின் என்ஜினுக்கு அருகில் அல்லது சில பெட்டிகளை அடுத்து இணைக்க வேண்டும்.

நீளம் இல்லாத பிளாட்பாரங்களால்...விரைவு ரயில்களில் இப்போது 24 பெட்டிகள் வரை இணைக்கப்படுகின்றன. இதனால், இரவு நேரத்தில், எதிர் மார்க்கத்தில் வரும் ரயிலுக்கு வழிவிடுவதற்காக சந்திப்பின்போது, சிறிய ரயில் நிலையங்களில் கூட ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.

ஆனால், இந்த ரயில் நிலையங்களில் பிளாட்பாரத்தின் நீளம் குறைவாக உள்ளதால், பெண்களுக்கான பெட்டி உள்ளிட்ட கடைசி பெட்டிகள் ரயில் நிலையத்தை விட்டு வெகு தொலைவில் "கும்மிருட்டில்' பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தப்படும் அவல நிலை இன்னமும் தொடர்கிறது.

உதவிக்கு அழைக்க என்ன வழி? டிக்கெட் பரிசோதகர்கள் பெரும்பாலும் பொதுப் பெட்டிகள் மற்றும் பகல் நேர ரயில்களின் 2-ம் வகுப்பு சேர் கார்களிலும் தங்களது வழக்கமான ஆய்வுப் பணிகளைக் கூட புறக்கணிக்கும் நிலை உள்ளது என்று பெண் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

விரைவு ரயில்களில் இரவில் ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்.பி.எஃப்.) ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 பெண் காவலர்களும், 3 ஆண் காவலர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தத் தொடர் வண்டிகளில் (வெஸ்டியுபிள்) ரயில்வே பாதுகாப்புப் படையினர் மட்டுமே இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலும் மகளிர் பெட்டிகளில் பாதுகாப்பு இல்லாத நிலையே இன்னமும் நீடிக்கிறது.

ஒடும் ரயிலில் ஏதேனும் அபாயம் நேரிட்டால், இந்தப் பெட்டிகளில் இருந்து ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களையோ உதவிக்க அழைக்க அவர்களது செல் போன் எண்களை, எழுதி வைக்க வேண்டும். கூடுதலாக பெண் காவலர்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பாதுகாப்புப் பணியில் ரயில்வே போலீஸôர்- ஆர்.பி.எப். இடையே ஒருங்கிணைப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

ரகசிய கண்காணிப்பு கேமிரா தேவை: ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் மேல் ரயில்வே லாபம் ஈட்டி வருகிறது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக தெற்கு ரயில்வே ஆண்டுதோறும் ரூ. 100 கோடி செலவிடுகிறது.

இப்போது, ஓடும் ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளிலாவது தானியங்கி ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை நிறுவ வேண்டும். இந்த கேமிராக்கள் ரூ. 500 முதல் ரூ. 10 ஆயிரம் வரை மிகக் குறைந்த விலையில் வெளிச்சந்தையில் கிடைக்கின்றன.

இத்தகைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, பெண் பயணிகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இனியாவது தெற்கு ரயில்வே வருமுன் காக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.