தமிழ்நாடு

நிலம் கிடைக்காமல் அல்லல்படும் அண்ணா பல்கலைக்கழகம்

திருநெல்வேலி : திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அதற்கான நிலம் ஒதுக்கப்படவில்லை.  இந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடங்கப்பட்ட கோவை அண்ணா தொழ

ப. இசக்கி

திருநெல்வேலி : திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அதற்கான நிலம் ஒதுக்கப்படவில்லை.

 இந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடங்கப்பட்ட கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கும், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கும் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது தற்போது அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.

 பல்கலைக்கழகத்துக்கு நிரந்தரமான இடமாக, கோபாலசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 650 ஏக்கர் நிலம் அல்லது ரெட்டியார்பட்டி அருகே நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமாக உள்ள சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கித் தரும்படி முதலாவது துணைவேந்தரான சு. காளியப்பன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

 இதனிடையே, பல்கலைக்கழக செயல்பாட்டை தொடங்கும் வகையில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகில் வாடகை கட்டடத்தில் பொறியியல் படிப்புகளை தொடங்கினார் காளியப்பன். அந்த கட்டடத்துக்கு தற்போது ஆண்டுக்கு சுமார் ரூ.30 லட்சம் வாடகையாக அளிக்கப்பட்டு வருகிறது.

 ஆண்டுகள் ஓடியதே தவிர பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரமான நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், கல்லூரி கட்டடங்கள் அமைந்துள்ள இடம்போக எஞ்சிய இடத்திலும், அருகில் காதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தையும் சேர்த்து பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிடப்பட்டது.

 அதன் தொடக்கமாக பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஏக்கர் நிலத்தை பல்கலைக்கழகத்துக்கு எடுத்துக் கொள்வது என்ற அடிப்படையில் அங்கு ரூ.7.44 கோடி செலவில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டடத்தை கட்டுவதற்காக 2010 ஆகஸ்ட் 7-ல் துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனாலும், அந்த இடத்தில் நுழைவதற்கான அனுமதியை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் துணை முதல்வர் அடிக்கல் நாட்டிய கட்டடத்துக்கான கட்டுமான பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. ஆக, நிலப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை.

 ரெட்டியார்பட்டியில் உள்ள நிலம் பல்கலைக்கழகத்துக்கு ஏற்ற இடம் என்பதால் அந்த நிலத்தைப் பெற்று அங்கு பல்கலைக்கழகத்திற்கான கட்டடங்களை கட்ட காளியப்பன் முயற்சி மேற்கொண்டார். அவரது முயற்சிக்கு திமுகவைச் சேர்ந்த மேயர் அ.லெ. சுப்பிரமணியனும் உதவி செய்தார். ஆனால், உள்ளூர் "அரசியல்' காரணமாக மேயரின் எதிர்தரப்பினருக்கு அதில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

 பாளையங்கோட்டை பகுதியில் அமையவிருந்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை 1990-ல் எம்.எல்.ஏ.வாக இருந்த அ.லெ.சுப்பிரமணியன் தனது தொகுதியான திருநெல்வேலி பகுதிக்கு கொண்டு சென்று விட்டார் என்பதில் திமுகவினர் பலருக்கு அதிருப்தி. இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தையும் அவர் சொல்லும் இடத்தில் அமைப்பதா என்பதில் ஏற்பட்ட அரசியல் கருத்துவேறுபாட்டால் அந்த இடத்தை கொடுப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

 இதனோடு சேர்ந்து துணைவேந்தர் காளியப்பனுக்கும், மாநில உயர்கல்வி துறைக்கு மட்டுமன்றி உள்ளூர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே "சில விஷயங்கள்' தொடர்பாக இருந்து வந்த கருத்துவேறுபாட்டால் பல்கலைக்கழகத்துக்கு நிலத்தை விரைவாக ஒதுக்குவதில் அல்லது பெற்றுத் தருவதில் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

 கோயில் நிலத்தை இதர துறைகளுக்கு ஒதுக்கும்போது அதற்கான விலையை சம்பந்தப்பட்ட துறையினர் இந்து சமய அறநிலையத் துறைக்கு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை. ரெட்டியார்பட்டி நிலத்துக்கு அரசின் வழிகாட்டு மதிப்பான சுமார் ரூ.10 கோடியை பல்கலைக்கழக சொந்த நிதியில் இருந்து செலுத்தவும் தயார் என அரசுக்கு காளியப்பன் கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை. பல்கலைக்கழகத்திடம் தற்போது உபரிநிதியாக சுமார் ரூ.60 கோடி உள்ளது.

 இந்த பல்கலைக்கழகத்துடன் தொடங்கப்பட்ட கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 130.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.68 கோடியில் கட்டடங்கள் கட்டுவதற்கு ஏற்கெனவே அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் முயற்சியால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு இப்போது 83.14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை முதல்வர் அல்லது துணை முதல்வரைக் கொண்டு இம்மாத இறுதியில் தொடங்க அப்பல்கலைக்கழகம் முடிவு ùóசய்துள்ளது.

 ஆனால், "தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கான நிலம் குறித்து அரசு இதுவரையில் எந்த முடிவும் எடுத்துள்ளதாகத் தெரியவில்லை.

 தற்போது புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள எம். ராஜாராம், நிலத்தை தேர்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்து அக்குழு பரிந்துரை செய்யும் இடத்தை அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆக, இந்த நிலம் விஷயம் மீண்டும் முதலில் இருந்துதான் தொடங்கப்படும்போல் தெரிகிறது. எப்போது தொடங்கி எப்போது முடித்து நிலத்தைப் பெறப்போகிறார்களோ என கல்வியாளர்களும், மாணவர்களும் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT