முகப்பு
தமிழ்நாடு

பதவி உயர்வு மூலம் உதவியாளர் நியமனம் இல்லை: தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை, ஜூலை 5: பதவி உயர்வு மூலமாக அல்லாமல் போட்டித் தேர்வுகள் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதன்மூலம், எழுத்தர், தட்டச்சர், தொலைபேசி இயக்குபவர், ஓட்டுந

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:04 PM
பகிர்:

சென்னை, ஜூலை 5: பதவி உயர்வு மூலமாக அல்லாமல் போட்டித் தேர்வுகள் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதன்மூலம், எழுத்தர், தட்டச்சர், தொலைபேசி இயக்குபவர், ஓட்டுநர், வாகனத் துப்புரவாளர் உள்ளிட்டோர் உதவியாளர் பணியிடத்துக்குச் செல்ல முடியாது.

 தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியிடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் உதவியாளர் பணியிடம் முக்கியமானது. அதில் ஏற்படக் கூடிய காலியிடங்கள் பல்வேறு வகைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் பட்டதாரி பதிவுரு எழுத்தர், பட்டதாரியில்லாத பதிவுரு எழுத்தர், பட்டதாரி அலுவலக உதவியாளர், தட்டச்சர், தொலைபேசி இயக்குபவர், ஓட்டுநர், வாகனத் துப்புரவாளர் மற்றும் வாகனத் தகவலர் ஆகியோருக்குப் பதவி உயர்வு அளிப்பதன் மூலம் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

 இப்போது இல்லை: இதுபோன்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்பும்போது அவர்களில் பலர் பணிபுரியும் அளவுக்குப் போதிய தகுதிகளைப் பெறுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. பெரிய அளவுக்கு எழுத்துத் தொடர்பானவையோ, கோப்புகளைக் கையாள்வது போன்ற முக்கிய வேலைகளோ அவர்களுக்கு இருப்பதில்லை. திடீரென அவர்கள் உதவியாளர் என்ற பணியிடத்துக்கு பதவி உயர்வின் மூலம் செல்லும் போது அவர்களால் திறமையாகப் பணி செய்ய முடிவதில்லை. இதனால், தலைமைச் செயலகத்தில் பணித் திறன் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

 திடீர் உத்தரவு: இந்தப் புகார்களைக் கருத்தில் கொண்டு, பணியாளர் - நிர்வாகச் சீர்திருத்தத் துறை முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. துறையின் செயலாளர் ம.குற்றாலிங்கம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவு:

 ""தலைமைச் செயலகத்தில் நடப்பு ஆண்டுக்கான உதவியாளர் காலிப் பணியிடங்கள் 219 என மதிப்பீடு செய்யப்பட்டது. இந்தப் பணியிடங்களில் வாகனம் ஓட்டுபவர், எழுத்தர் என பல்வேறு நிலைகளில் இருப்பவர்களில் 5 பேர் மட்டுமே பதவி உயர்வு மூலம் உதவியாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

 இதன்மூலம், காலியிடங்களின் எண்ணிக்கை 214 ஆக இருந்தது. விடுப்பு ஒதுக்கீடு, எதிர்பாராத நிகழ்வுகள், தாற்காலிகமாகத் தோற்றுவிக்கப்பட்டது ஆகியவற்றாலான 55 பணியிடங்களைத் தவிர்த்து 159 காலியிடங்களுக்கு உதவியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பட்டதாரிகளாக உள்ள பதிவுரு எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், மோட்டார் சைக்கிள் தகவலர், வாகனத் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களில் இருந்து பணிமாற்றல் மூலம் நியமனம் மற்றும் பட்டதாரியில்லாத பதிவுரு எழுத்தர், தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் இருந்து பணிமாற்றல் மூலம் நியமனம் என்ற விதி தளர்த்தப்படுகிறது.

 காலியானவற்றில் 134 இடங்களை நேரடி நியமனம் மூலமாகவும், 25 இடங்களை தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி இதன் வழியாக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்'' என்று தனது உத்தரவில் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு: நூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவதால் படித்து, வேலையின்றித் தவிக்கும் பட்டதாரி இளைஞர்கள் பயன்பெற வழி ஏற்படும். உதவியாளர் பணியிடத்தில் இருந்து பதவி உயர்வுகள் மூலம் தலைமைச் செயலகத்தில் உயர்வான இடத்துக்கும் வர வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.