முகப்பு
தமிழ்நாடு

விபத்து காப்பீட்டுத் தொகை அளிப்பதில் தாமதம்: தவிப்பில் மீனவர் குடும்பங்கள்

சென்னை : தமிழகம் முழுவதும் விபத்து காப்பீட்டுத் தொகை அளிப்பதில் கால தாமதம் ஆவதால் மீனவர் குடும்பங்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளன. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:07 PM
பகிர்:

சென்னை : தமிழகம் முழுவதும் விபத்து காப்பீட்டுத் தொகை அளிப்பதில் கால தாமதம் ஆவதால் மீனவர் குடும்பங்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளன. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 தமிழகத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களும், உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான திட்டம் விபத்துக் காப்பீடு ஆகும். ஒரு மீனவர் சாலை விபத்துகளில் மரணம் அடைய நேர்ந்தாலோ, மீன்பிடிக்கச் செல்லும் போது நோய்களால் இறக்க நேர்ந்தாலோ அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துக் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

 இதற்கு ஒரே தகுதி, கூட்டுறவு சங்கத்தில் அந்த மீனவர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதாகும்.

 ஒவ்வொரு மீனவருக்கான காப்பீட்டு பிரீமியத் தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்தி வருகின்றன. ஒவ்வொரு மீனவருக்கும் தலா ரூ.7.50-ஐ மாநில அரசும், ரூ.7.50-ஐ மத்திய அரசும் செலுத்துகின்றன. மொத்தமாக ஒரு மீனவருக்கு ரூ.15 பிரீமியத் தொகையாக செலுத்தப்படுகிறது. விபத்து நேர்ந்து அதில் மீனவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் காப்பீட்டுத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

 தொடர்ந்து தாமதம்: விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு அவை காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை கொடுக்கப்படும்.

 பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு இந்தத் தொகை கடந்த சில ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த மீனவ அமைப்புகள் மீன்வள இயக்குநரிடம் பல முறை புகார் மனுக்களை அளித்தும் பலன் இல்லை.

 "பாதிக்கப்படும் ஒவ்வொரு மீனவரின் குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை அளிப்பதற்கு முன்பாக, காப்பீட்டு நிறுவனம் சில தகவல்களை மீன்வள உதவி இயக்குநரிடம் கோர வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு, கோரப்படும் தகவல்களை உரிய நேரத்தில் உதவி இயக்குநர் அலுவலகம் தருவதில்லை. இதுதொடர்பாக, மீன்வள இயக்குநரிடம் புகார் அளித்தும் பலன் கிடைக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்ற குறைபாடுகள் இருந்தும் அவை களையப்படவில்லை' என்கிறார் தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி.

 இதுகுறித்து, மீன்வள இயக்குநர அதிகாரிகளிடம் கேட்ட போது, "சென்னையில் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான பணிகள் மந்தமாகவே நடைபெறுகின்றன' என்று கூறுகின்றனர்.

 விபத்துகளில் பலியாகி இறக்கும் மீனவர்களின் குடும்பங்கள் இப்போது பரிதவிப்பில் ஆழ்ந்துள்ளதாகவும், அவர்களுக்கு உரிய அளவில் நிவாரணம் கிடைக்க காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவ சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.