மதுரையில் இருந்து இன்று புறப்படவிருந்த பாரத தரிசனம் சுற்றுலா ரயில் சேவை ரத்து
சென்னை, மே 9: மதுரையில் இருந்து வட மாநில சுற்றுலா தலங்களுக்கு மே 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படவிருந்த பாரத தரிசனம் சுற்றுலா ரயில் சேவை தொடர்ந்து 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால்
சென்னை, மே 9: மதுரையில் இருந்து வட மாநில சுற்றுலா தலங்களுக்கு மே 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படவிருந்த பாரத தரிசனம் சுற்றுலா ரயில் சேவை தொடர்ந்து 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து காத்திருந்த 804 பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) 2005 முதல் நாடு முழுவதும் புனித தலங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தொடர் ரயில் சுற்றுலா சேவைகளை (பேக்கேஜ் டூர்) இயக்கி வந்தது. "வில்லேஜ் ஆன் வீல்ஸ்' என்ற இந்த ரயில் சேவை பாரத தரிசனம் என்ற பெயரில் இயக்கப்பட்டது.
மதுரையில் இருந்து காசி, கயா, ஜம்மு காஷ்மீர், டார்ஜிலிங்-நியூஜுபைல்குரி, பண்டரிபுரம், அலாகாபாத், கோவா உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலங்களுக்கு பெரும்பாலான பாரத தரிசனம் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன.
கடந்த ஆண்டில் இது 100-வது சுற்றுலா பயணத்தை எட்டியது. இந்த ரயில் சுற்றுலா தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநில மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றது. இதனால், ஆண்டுதோறும் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
ரூ. 60 லட்சம் வருவாய் இழப்பு: இந்த நிலையில், மதுரையில் இருந்து காசி, கயா, ஹரித்துவார் உள்ளிட்ட வடமாநில புனித தலங்களுக்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 12 நாள்களுக்கு பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்தது.
இந்த ரயிலில் பயணம் செய்ய (உணவு, தங்கும் வசதி உள்பட) நபருக்கு ரூ. 6,155 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 400-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.
ஆனால், பயண நாளுக்கு சில நாள்களுக்கு முன்பு இந்த சுற்றுலா ரயில் சேவை ஒத்தி வைக்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்தது. இதனால், முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் அனைவரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த ரயில் சுற்றுலா குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என நம்பிக்கையுடன் மீண்டும் காத்திருந்தனர்.
இந்த நிலையில், மதுரையில் இருந்து காசி, வாரணாசி உள்ளிட்ட வட மாநில நகரங்களுக்கு மே 10-ம் தேதி பாரத தரிசனம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மே 10 முதல் 24-ம் தேதி வரை 15 நாள்களுக்கான சுற்றுலா பயணக் கட்டணம் நபருக்கு ரூ. 7,700.
இந்த ரயிலில் செல்ல 504 பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இப்போது இந்த சுற்றுலா ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 ரயில் சேவைகள் மூலம் மட்டும் ரூ. 60 லட்சம் வரை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் குடும்பத்தினருடன் வடஇந்திய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இன்பக் கனவுகளுடன் காத்திருந்த பயணிகள் சுற்றுலா ரயில் மீண்டும் ரத்தானதால் மிகுந்த அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
பயணிகள் விரும்பாத உணவுகள் விநியோகம்: இந்த சுற்றுலா ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து நடத்த உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களுக்கு டெண்டர் மூலம் ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், சுற்றுலா ரயில் சேவைகளை நடத்த இப்போது ஒப்பந்த அனுமதி பெற்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துடன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சுற்றுலா ரயில்களில் செல்லும் தென் மாநிலப் பயணிகளுக்கு விருப்பம் இல்லாத உணவு வகைளை இந்த நிறுவனம் வழங்கியதால் அதிருப்தியுற்ற பயணிகள் புகார் செய்ததையடுத்து, சிக்கல் நீடிக்கிறது.
இதன் எதிரொலியாகவே தொடர்ந்து 2-வது முறையாக பாரத தரிசனம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.ஆர்.சி.டி.சி. முடக்கமா? இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் இருந்து முக்கிய ரயில்களில் இருந்த சமையல் அறைப் பெட்டிகள், சிற்றுண்டி நிலையங்கள் ஆகியவை மீண்டும் ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இ-டிக்கெட் சேவையையும் ரயில்வே துறையே ஏற்று நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இப்போது, பாரத தரிசனம் சுற்றுலா ரயில் சேவைகளை நடத்துவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களின் நம்பகத் தன்மையைப் பெறும் வகையில், தடையின்றி சுற்றுலா ரயில் சேவைகளை நடத்த ஐ.ஆர்.சி.டி.சி. விழித்துக் கொள்ளுமா?