முதல்வரின் கவனத்துக்கு ஏங்கும் திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம்
திருவொற்றியூர், மே.21: மிக பழமையான திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதி சுற்றுச்சூழல் பிரச்னைகளால் அசுத்தமடைந்து வருகிறது. கோயிலின் பழம்பெருமையைக் காக்க முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண
தமிழ்நாடுமுதல்வரின் கவனத்துக்கு ஏங்கும் திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம்
திருவொற்றியூர், மே.21: மிக பழமையான திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதி சுற்றுச்சூழல் பிரச்னைகளால் அசுத்தமடைந்து வருகிறது. கோயிலின் பழம்பெருமையைக் காக்க முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண
திருவொற்றியூர், மே.21: மிக பழமையான திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதி சுற்றுச்சூழல் பிரச்னைகளால் அசுத்தமடைந்து வருகிறது.
கோயிலின் பழம்பெருமையைக் காக்க முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவடையம்மன் திருக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை தன்னகத்தே கொண்டது.
சென்னைப்பட்டினத்தின் அருகில் அமைந்திருந்த கிராமங்களில் ஒன்று திருவொற்றியூர். ஆன்மீக வரலாறுகளைக் கொண்ட திருவொற்றியூரில் பட்டினத்தார், அகத்தியர், கெüடில்யர் உள்ளிட்டோரின் பெயரில் மடங்கள் இருந்து வந்தன. நீண்ட கடற்கரை நகரான திருவொற்றியூரில் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தியாகராஜர் திருக்கோயில் உள்ளது. நீண்ட தேரடி தெரு, நான்கு மாடவீதிகள், தெப்பக்குளம், திருத்தேர் உள்ளிட்ட அனைத்துச் சிறப்புகளையும் உடைய இக்கோயில் சமீப காலமாக கவனிப்பாரற்ற நிலையால் உள்ளது.
சுற்றிலும் நிறுத்தப்படும் வாகனங்கள்: சுமார் 30 அடி உயரத்தில் கோயிலின் நான்கு புறமும் சுற்றுச் சுவர்கள் உள்ளன. இதில் மேற்கு மாட வீதி முழுவதும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. லாரிகளை நிறுத்தி பழுது பார்க்கும் இடமாக மாறிவிட்டது.
வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அதன் மறைவைப் பயன்படுத்தி கழிப்பிடமாகவும் உபயோகித்து வருகின்றனர்.
குப்பைக்கிடங்குகளாக மழைநீர் கால்வாய்கள்: கோயில் திருக்குளம் அழகாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் தண்ணீர்தான் இல்லை. எவ்வளவு மழை பெய்து நீர் வந்தாலும் அருகில் உள்ள கடலில் சென்று சேருகிறதே தவிர
குளத்திற்கு வருவதில்லை.
காரணம் தண்ணீர் வந்து கொண்டிருந்த அனைத்து வழிகளும் தூர்ந்து விட்டன. குளத்துக்கு மழைநீரைக் கொண்டு வர நகராட்சி பல லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்கள் அமைத்தது. ஆனால் அதன்பலன் ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைத்தே தவிர குளத்திற்கு கிடைக்கவில்லை.
கால்வாய் முழுவதும் குப்பைகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் குளத்தைச் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார். இதனைக்கொண்டு கடந்த ஆண்டு தூர்வாரியும் தண்ணீர் வரத்து இல்லாததால் குளத்தில் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. குளத்தைச் சுற்றிலும் அழகுபடுத்தி பூங்கா அமைக்க ஐ.டி.சி நிறுவனம் முன்வந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கூட நடைபெற்றும் இதுவரை அப்பணி துவங்கவில்லை.
நகராட்சியே அசுத்தப்படுத்தும் அவலம்: கோயிலின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள குளத்தின் கிழக்குக் கரையில் ஈமச்சடங்குகள் செய்யும் கூடம் உள்ளது. ஒருகாலத்தில் வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு அகலமாக இருந்த இப்பகுதி தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சுருங்கிவிட்டது.
மீதமுள்ள பகுதியும் திறந்தவெளி கழிப்பிடமாகவும், மாட்டுத் தொழுவமாகவும் காட்சியளிக்கின்றது. தெற்கு பகுதியில் பூக்கடைகளும், டீக்கடைகளும் ஆக்கிரமித்துள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் ஒரு பகுதி குளத்தில் தான் வீசியெறியப்படுகின்றன. இக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
குளத்தின் வட பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு பகுதியில் குழந்தைகள் சத்துணவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதியில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வண்டி வண்டியாகக் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதனால் காலை நேரத்திலேயே அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவது வாடிக்கையாகிவிட்டது. மழைக்காலம் என்றால் குப்பை, கழிவுநீர் அனைத்தும் குளத்திற்குள் சென்றுவிடும்.
வெட்டவெளியில் கழிப்பிடங்கள்: கோயிலுக்கு தினமும் பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் வெளியூரிலிருந்து வருபவர்கள்.
ஆனால் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகமோ அல்லது நகராட்சியோ எவ்வித கழிப்பிட வசதிகளையும் அமைக்கவில்லை. திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலிருந்து கோயில் பிரதான கோபுரம் வரை அகலமான தேரடி உள்ளது. ஆனால் இங்குள்ள கடைக்காரர்களே பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.
முதல்வர் தலையிட கோரிக்கை: இப்பிரச்னைகள் குறித்து திருவொற்றியூர் பாரதி பாசறை அமைப்பாளர் புலவர் டாக்டர் மா.கி.ரமணன் கூறியது: பழமையான இக்கோயிலுக்கு கடந்த பத்து, இருபது ஆண்டுகளாகத்தான் புகழுக்கு கேடு ஏற்பட்டுள்ளது.
பக்தர்களின் தேவைக்கு ஏற்ப கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இக்கோயிலைப் பற்றி நன்கு அறிந்தவர் முதல்வர் ஜெயலலிதா.
இப்போதாவது திருவொற்றியூர் கோயிலுக்கு விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்பதே பக்தர்கள், பொதுமக்களின் விருப்பம் என்றார் ரமணன்.