முகப்பு
தமிழ்நாடு

கண்ணீரை வரவழைக்கும் மிளகாய் விலை

சென்னை: மிளகாயின் காரத்தால் கண்ணீர் விடாதவர்கள் கூட, மிளகாயின் விலையைக் கேட்டால் கண்ணீர் விடும் அளவுக்கு இப்போது தமிழ்நாட்டில் காய்ந்த மிளகாய் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மிளகாய

தமிழ்நாடு

கண்ணீரை வரவழைக்கும் மிளகாய் விலை

சென்னை: மிளகாயின் காரத்தால் கண்ணீர் விடாதவர்கள் கூட, மிளகாயின் விலையைக் கேட்டால் கண்ணீர் விடும் அளவுக்கு இப்போது தமிழ்நாட்டில் காய்ந்த மிளகாய் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மிளகாய

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:08 PM
பகிர்:

சென்னை: மிளகாயின் காரத்தால் கண்ணீர் விடாதவர்கள் கூட, மிளகாயின் விலையைக் கேட்டால் கண்ணீர் விடும் அளவுக்கு இப்போது தமிழ்நாட்டில் காய்ந்த மிளகாய் விலை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் மிளகாய்த் தேவையில் பெரும்பகுதி தென் மாவட்டங்களில் விளையும் மிளகாய் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பெருமளவு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர ஆந்திராவிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு மிளகாய் வருகிறது.

குண்டு மிளகாய், நீட்டு மிளகாய் என இரண்டு வகைகள் இருந்தாலும் பச்சை மிளகாய்க்கு நீட்டு மிளகாயைப் பயன்படுத்தும் தமிழ்நாட்டு மக்கள், காய்ந்த மிளகாய்க்கு குண்டு மிளகாயையே விரும்பிப் பயன்படுத்துகின்றனர். குண்டு மிளகாய் மிதமான காரம் கொண்டதாக இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் மிளகாய் அறுவடை செய்யப்படும் பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் காய்ந்த மிளகாயின் விலை கடைகளில் குறைவாக இருப்பதும், மற்ற மாதங்களில் சற்று அதிகமாக இருப்பதும் வழக்கமானதுதான். கடந்த ஆண்டு காய்ந்த குண்டு மிளகாய் ஒரு கிலோ ரூ.150 வரை விற்கப்பட்டது. இது கடுமையான விலை உயர்வாக அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இப்போது ஒரு கிலோ காய்ந்த குண்டு மிளகாய் விலை ரூ.200-ஐ கடந்து, ரூ.220-க்கு விற்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான அமுதம் அங்காடிகளில் கூட ரூ.220-க்குதான் விற்பனை செய்யப்படுகின்றன. நீட்டு மிளகாய் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மிளகாய் விலை ரூ.200-ஐ கடந்து விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்கிறார் தமிழ்நாடு அனைத்து மளிகை வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. சொரூபன்.

இந்த ஆண்டு மிளகாய் விளைச்சலில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த பாதிப்பும் இல்லை. எனினும் ஆன்லைன் வர்த்தகம் என்ற சூதாட்ட வணிக முறையும், சில தரகர்களுமே இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்குக் காரணம். ஆயிரக்கணக்கான மிளகாய் மூட்டைகளைப் பதுக்கி வைத்துள்ள இந்தக் கள்ளச் சந்தைக்காரர்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாலேயே இந்தக் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மளிகை வியாபாரிகளும், பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில், ஊகபேர வணிகத்தில் ஈடுபடும் கள்ளச் சந்தைக்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள காய்ந்த மிளகாயை உடனடியாகச் சந்தைக்குக் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் சொரூபன்.

ஒரு பக்கம் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.220 என விற்கப்படும் அதே வேளையில், மிளகாய் உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.

இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே. சுப்பிரமணியன், மிளகாய் அறுவடை காலமான பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு கிலோ காய்ந்த மிளகாய்க்கு அதிகபட்சம் ரூ.40 வரை விலை கிடைத்தது. வீட்டில் மிளகாயைப் பத்திரப்படுத்தி இப்போது விற்கும் விவசாயிகளுக்கு அதிகபட்சம் ரூ.95 வரை கிடைக்கிறது.

ஆனால் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்று பதுக்கி வைத்து விற்கும் கள்ளச் சந்தைக்காரர்கள் கொள்ளை லாபம் பெறுகிறார்கள் என்றார்.

வரலாறு காணாத இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, காய்ந்த மிளகாயை பொதுமக்கள் வாங்கும் விலைக்கு குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →