முகப்பு
தமிழ்நாடு

பராமரிக்கப்படாத காமராஜர் மணிமண்டபம்: சுற்றுலாப் பயணிகள் வேதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காமராஜர் மணிமண்டபம் பராமரிக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மண்பத்தைத் தூய்மையாக்கி பொலிவு பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:13 PM
பகிர்:

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காமராஜர் மணிமண்டபம் பராமரிக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மண்பத்தைத் தூய்மையாக்கி பொலிவு பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபம் 2000-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

 பூங்கா, சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடலை ரசிக்கும் வகையில் நவீன இருக்கைகள், அலங்கார மின் விளக்குகள் என அருமையாகக் காட்சியளித்த மணிமண்டப வளாகம், தற்போது மக்கள் சுற்றி வரவே அச்சப்படும் நிலையில் அவலமாகக் காட்சியளிக்கிறது.

 மண்டபத்தின் முன்பகுதி குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது. மண்டபத்தின் மேற்குப் பகுதியைச் சுற்றிலும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன.

 மண்டப வளாகமே புதர்களாகவும், அலங்கார விளக்குகள் துருப்பிடித்தும், அலங்கார நீரூற்று சேதமடைந்தும் காணப்படுகின்றன.

 இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துள்ளதாலும், பூங்கா சீரற்றுக் கிடப்பதாலும் மண்டபத்தைச் சுற்றி வர யாருக்கும் அனுமதியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 எனினும், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள காமராஜரின் வெண்கலச் சிலையுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

 உலகத் தலைவர்கள் மற்றும் இந்திய, தமிழக அரசியல் தலைவர்களுடன் காமராஜர் உரையாடும் புகைப்படங்கள் மண்டபத்தில் உள்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

 குழந்தைகளுடன் காமராஜர் கொஞ்சி மகிழ்வது, கிரிக்கெட் விளையாடுவது போன்ற அரிய வகை புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

 காமராஜருடன் நடிகர் சிவாஜிகணேசன் இணைந்திருக்கும் புகைப்படத்தை இங்கு வைக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மதச்சார்பற்ற ஜனதா தள தமிழக தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

 மக்கள் தலைவராக வாழ்ந்த காமராஜரின் மணிமண்டபத்துக்கு இந்த நிலையா என்று இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோபமடைகின்றனர். முறையாகப் பராமரிக்கப்பட்டு மீண்டும் பொலிவுடன் மண்டபம் காட்சியளிப்பது எப்போது?  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.