பரிதவிப்பில் டெல்டா விவசாயிகள்!
சென்னை, அக். 23: தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்
தமிழ்நாடுபரிதவிப்பில் டெல்டா விவசாயிகள்!
சென்னை, அக். 23: தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்
சென்னை, அக். 23: தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்துக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என இந்திய உணவுக் கழகம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிபந்தனையை சற்று தளர்த்தி 21 சதவீதம் வரை ஈரப்பதம் உடைய நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கழகத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றிருந்தது. இந்த அனுமதியானது கடந்த 30.9.2011-ம் தேதியோடு காலாவதியாகி விட்டது.
இதனால், இம்மாதம் 1-ம் தேதி முதல் 17 சதவீதத்துக்கு அதிகமான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடையின்போது முதல் நாள் கதிர் அறுத்தால், ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து, மறுநாள்தான் களத்துக்கு கொண்டு சென்று கதிர் அடிக்கும் பணி நடைபெறும். ஆனால், குறுவை அறுவடைப் பணி வடகிழக்குப் பருவமழை காலத்தில் நடைபெறுவதால், எந்த நேரத்திலும் மழை பெய்யும். எனவே, கதிர் அறுத்த உடனேயே களத்துக்கு கொண்டு சென்று கதிர் அடிப்பது கட்டாயம் ஆகும்.
எனவே, சம்பா, தாளடி நெல்லைவிட இயல்பாகவே குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
மேலும், இப்போது விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இயந்திரங்களில் நெற்பயிர் கசக்கப்படும்போது, பயிரின் தண்டுகளில் உள்ள ஈரத்தால், நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகமாகிறது.
இது போன்ற பல காரணங்களால் குறுவை நெல் சாதாரணமாகவே சுமார் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உடையதாக இருக்கும். எனவே, 17 சதவீத ஈரப்பதத்தோடு குறுவை நெல்லை அறுவடை செய்வது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
இந்த சூழலில் இம்மாதம் 1-ம் தேதியிலிருந்து 17 சதவீத ஈரப்பதத்துக்கு அதிகமான நெல்லை கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை காய வைத்து, ஈரப்பதத்தைக் குறைப்பதற்கு பெரும் அல்லல்படுகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் இப்போது வயல் பகுதிகள் எங்கும் நீர் நிறைந்திருக்கின்றன. இதனால், வயல்களில் காய வைக்கும் கள வசதி இல்லை.
எனவே, இப்போது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளே களங்களாக மாறியுள்ளன. அந்த மாவட்டங்களில் எல்லா சாலைகளின் நெடுகிலும் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணிகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே கடந்த இரு நாள்களாக அந்த மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் நெல்லை காய வைப்பதும் தடைபட்டுள்ளது. இந்த மழை மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் நெல்லை பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர்.
விவசாயிகளின் இந்த பரிதாபமான நிலையைத் தனியார் வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். விவசாயியின் களத்துக்கே லாரிகளுடன் நேரில் செல்லும் வியாபாரிகள், அடிமாட்டு விலைக்கு நெல்லை விலை பேசுகிறார்கள். மாற்று வழி எதுவும் தெரியாததால், வியாபாரிகள் கேட்ட விலைக்கே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குவிண்டாலுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை இழப்பு ஏற்படுகிறது.
இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியதாவது:
நெல்லைப் பொருத்தவரை 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது இல்லை என்பது இந்திய உணவுக் கழகத்தின் பொதுவான விதி. இது வட மாநிலங்களுக்குப் பொருந்தலாம். ஆனால், தமிழகத்துக்குப் பொருந்தாது.
ஏனெனில், வடகிழக்குப் பருவ மழையின் போது தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில்தான் அதிக மழை பொழிகிறது. அந்த நேரத்தில்தான் இங்கு குறுவை அறுவடை நடைபெறுகிறது.
எனவே, 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதத்துடன் நெல் அறுவடை என்பது இயலாதது. அதனால்தான் 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதை நாங்கள் வெறும் சலுகையாகக் கேட்கவில்லை. 17 சதவீதத்துக்கும் மேல் எவ்வளவு ஈரப்பதம் இருந்தாலும், கூடுதல் ஈரப்பதத்துக்கேற்ப குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து கொண்டு, கொள்முதல் செய்யவே வலியுறுத்துகிறோம்.
மேலும், 17 சதவீதத்துக்கும் கூடுதல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கழகத்தின் அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்பது சரியானதாக தெரியவில்லை. இதற்காக ஒரு நிரந்தர அனுமதியைத் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்றார் ரங்கநாதன்.
விவசாயிகளின் இந்தப் பரிதாப நிலையைப் போக்கத் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எம். வீரசண்முகமணியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
இப்பிரச்னை தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி, மத்திய அரசின் உணவுத் துறை செயலாளருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம்.
இதற்காக மத்திய உணவு அமைச்சகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறோம். மத்திய அரசின் அனுமதி இன்னும் ஓரிரு நாளில் கிடைத்து விடும் என உறுதியாக நம்புகிறோம். எனவே, விரைவிலேயே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.
விவசாயிகளின் தர்மசங்கடமான நிலையை பயன்படுத்தித் தனியார் வியாபாரிகள் முழுமூச்சில் களமிறங்கி நெல் கொள்முதல் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்று அரசு உறுதியாக எதுவும் கூறாததாலும், எந்தவித உத்தரவாதமும் அளிக்க முன்வராததாலும் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
கூலித் தொழிலாளர் பற்றாக்குறையாலும், அதிக லாபம் இல்லாமல் இருப்பதாலும் ஏற்கெனவே பாதிப்பில் பரிதவிக்கும் நெல் சாகுபடி விவசாயிகள், அரசின் நெல் கொள்முதல் பிரச்னையால் மனமொடிந்த நிலையில் இருக்கிறார்கள்.