பிளாஸ்டிக் பைகளுக்கு விலை: முறையாக கடைப்பிடிக்கின்றனவா வணிக நிறுவனங்கள்?
சென்னை, செப்.25: சுற்றுச்சூழலை காக்க வேண்டுமென்ற நோக்கில், பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவு வணிக நிறுவனங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்துகின்றன?
சென்னை, செப்.25: சுற்றுச்சூழலை காக்க வேண்டுமென்ற நோக்கில், பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவு வணிக நிறுவனங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்துகின்றன? அரசு உத்தரவால் பயன் ஏதும் கிடைத்துள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
வர்த்தக நிறுவனங்கள், துணிக்கடைகள், காய்கறிக் கடைகளில் பொருள்களை வாங்கும் போது பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்கக்கூடாது என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.
பிளாஸ்டிக் பைகளை அதன் அளவுக்கு ஏற்ப விலைகளை நிர்ணயித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தடுப்பதற்காகவும், பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இத்தகைய நடைமுறையை கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், உண்மையிலேயே இதனால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளதா? வணிக நிறுவனங்கள் அனைத்தும் இந்த உத்தரவை பின்பற்றுகின்றனவா?
Advertisement
இது குறித்து பல்பொருள் அங்காடியின் மேலாளர் எஸ்.சுரேஷ் கூறியதாவது: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவையடுத்து எங்கள் அங்காடியில் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு வழங்குகிறோம். பிளாஸ்டிக் பைகளுக்கு அதன் அளவுக்கு ஏற்றதுபோல் ரூ.2 முதல் ரூ.8 முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை நிர்ணயம் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது வீட்டிலிருந்தே துணிப்பைகளை கொண்டு வருகின்றனர். ஏன் விலை கொடுத்து பிளாஸ்டிக் பைகளை வாங்க வேண்டும் என கேள்வி கேட்கும் வாடிக்கையாளர்களுக்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. எங்களைப் போன்ற பெரிய அங்காடிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றுகின்றனர், ஆனால் சிறு வியாபாரிகள் இன்றும் பிளாஸ்டிக் பைகளை இலவசமாக அளிக்கின்றனர் என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் ராமன்: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவை சில வணிக நிறுவனங்களே பின்பற்றுகின்றன. ஆனால், பெரும்பான்மையான பல்பொருள் அங்காடிகள், துணிக்கடைகள், காய்கறிக் கடைகள் ஆகியவை பிளாஸ்டிக் பைகளை இலவசமாகவே வழங்கி வருகின்றன. வியாபாரிகளுக்கு காசுக்கு பிளாஸ்டிக் பைகளை கொடுத்தால் வாடிக்கையாளர்களின் வருகை குறையலாம் என்ற அச்ச உணர்வே காரணம். பிளாஸ்டிக் பைகளுக்கு குறைந்த விலையே நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் விலை கொடுத்து பிளாஸ்டிக் பைகளை வாங்குகின்றனர். கேரள மாநிலத்தை போல் குறைந்த விலையில் காகிதப் பைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதேபோல், பிளாஸ்டிக் பைகளின் தயாரிப்பை தடை செய்தால் மட்டுமே, சுற்றுச்சூழலை காக்க முடியும் என்றார்.
அரசாங்க முயற்சிகளை விட பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இருந்தால்தான் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறையும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வளர்களின் கருத்து.