தொடர் மின்வெட்டால் கருகும் வேர்க்கடலை பயிர்
திருத்தணி, ஆக. 6: தொடர் மின் வெட்டு, பருவமழை பொய்த்தது காரணமாக தாழவேடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலைப் பயிர் கருகி வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 மாதப் பயிரான வேர
திருத்தணி, ஆக. 6: தொடர் மின் வெட்டு, பருவமழை பொய்த்தது காரணமாக தாழவேடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலைப் பயிர் கருகி வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
3 மாதப் பயிரான வேர்க்கடலை சாதாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். சரியான பராமரிப்பு இருந்தால் ஏக்கருக்கு 60 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும்.நெல் பயிரைவிட வேர்க்கடலைக்குப் பராமரிப்பு வேலைகள் குறைவு என்பதுடன், அதிக வருமானமும் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் பயிர் செய்து வருகின்றனர்.
திருத்தணி சுற்றுப்புற கிராமங்களான அகூர், கோரமங்களம், முருகம்பட்டு, டி.வி.புரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், பொன்பாடி தாழவேடு உள்ளிட்ட கிராமங்களில் வேர்க்கடலை பயிர் செய்யப்பட்டு வருகிறது.இதில் கன்னிகாபுரம், செருக்கனூர், கே.ஜி.கண்டிகை, பெருங்களத்தூர், விநாயகபுரம் பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டுக் காரணமாக விவசாயப் பாசனத்துக்குத் தேவையான மும்முனை மின்சாரம் பகலில் மூன்று மணி நேரமும், இரவில் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தரப்படுகிறது.
சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படுவதால், எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என தெரியாமல் விவசாயிகள் பகல், இரவு பாராமல் வயலில் காத்திருந்து போர்வெல் மோட்டார் மூலம் பாசனம் செய்து வருகின்றனர்.ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 மணி நேரம் வரை பாசனம் செய்ய வேண்டும்.ஆனால் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள தாழவேடு, நெமிலி உள்ளிட்ட பல கிராமங்களில் வேர்க்கடலைப் பயிருக்கு போதுமான தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால் வேர்க்கடலை வயல்கள் ஈரப்பதமின்றி வறண்டு பயிர்கள் கருகி வருகின்றன. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் போதுமான மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தாழவேடு கிராமத்தில் தொடர் மின்வெட்டால் கருகிவரும், வேர்க்கடலை பயிர்.