விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலத்தை அடுத்த தொரவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மாணவர்கள் பழுதடைந்த வகுப்பறையிலும், மரத்தடியிலும் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவலநிலை உள்ளது.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட தொரவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் தொடர்ந்து 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சிப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிக சதவீதத்தில் தேர்ச்சிப் பெறும் பள்ளியின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மரத்தடியில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலைமை உள்ளது.
மாணவர்கள் நன்றாகப் படிப்பதற்கு அக, மற்றும் புற சூழல் முக்கியமானதாகும். ஆனால், இந்த பள்ளியின் வகுப்பறைகள் பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள வகுப்பறையிலேயே அமர்ந்து படித்து வருகின்றனர்.இதனால் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். இதேபோல் அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி ஆய்வகம் பாழடைந்து, அவைகளைப் பயன்படுத்த முடியாமல் அவை பூட்டியே கிடக்கின்றன.
இது குறித்து தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த சி.தென்றல் தெரிவித்தது: தொரவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொரவளூர், பரவளூர், கொடுக்கூர், மணவாளநல்லூர், கோமங்கலம், ராஜீவ்காந்தி நகர், முகுந்தநல்லூர், கச்சிபெருமாநத்தம், விளாங்காட்டூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வகுப்பறையில் தரைதளம் இடிந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. வகுப்பறையில் கட்டப்பட்டுள்ள சிமென்ட் ரேக்குகள் அந்தரங்கத்தில் தொங்குகின்றன. எப்போது வேண்டுமானாலும் மாணவர்களின் மீது இடிந்து விழும் அபாயம் உள்ளது.
இதேபோல் அறிவியல் ஆய்வகமும் மாணவர்கள் உள்ளே செல்ல முடியாமல் பயனற்றுக் கிடக்கிறது. கணினி ஆய்வகமும் உடைந்து கட்டுவிரியன் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வாழும் கூடாரமாக உள்ளது.கடந்த ஆண்டு 7-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது அந்த மாணவனின் விரலில் தேள் கொட்டி விரலில் தொங்கிக் கொண்டிருந்தபடியே இருந்ததை ஆசிரியர்கள் பார்த்து அந்த மாணவனை விருத்தாசலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
கணினி ஆய்வகத்துக்குள் சென்ற போது கொடிய விஷமுள்ள பாம்புகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது பள்ளியில் கணினியும், பிரஜக்டரும் உள்ளது. கணினி பாடத்துக்கு சிறப்பு கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கணினி ஆய்வக அறை மிகவும் பழுதடைந்துள்ளதால் அவை பயனற்று காட்சி பொருளாகக்கூட பார்க்க முடியாமல் உள்ளது.
மாடியில் உள்ள வகுப்பறைகளுக்குச் செல்லும் படிக்கட்டுகளும் அந்தரத்தில் தொங்குவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அஞ்சி அஞ்சி வகுப்பறைகளுக்குச் சென்று வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்திருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஏதேனும் ஓர் அசம்பாவிதம் நடந்தால்தான் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ என வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.
எனவே, கல்வித்துறையும், தொடர்புடைய அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.