மந்த நிலையில் ஒரகடம் மேம்பால கட்டுமானப் பணி
ஒரகடம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணி
ஒரகடம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மந்த நிலையில் நடந்து வருவதால் ஒரகடம் பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு பல பன்னாட்டு தொழிற்சாலைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருகின்றன.
÷மேலும் பல தொழிற்சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதனால் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
÷இதன்படி ரூ.300 கோடி மதிப்பீட்டில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையை இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும், அதேபோல் சிங்கபெருமாள் கோயில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையை ஒரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தி மேம்படுத்த திட்டமிட்டு அந்த பணியும் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் சிங்கபெருமாள் கோயில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையும், வண்டலூர் வாலாஜாபாத் சாலையும் சந்திக்கும் ஒரகடம் கூட்டுச் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.20.89 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் 620 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
÷இந்த மேம்பாலத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்கத் திட்டமிட்டு கட்டுமான நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. மேம்பாலம் 18 மாதங்களில் அதாவது 2010-ஆம் ஆண்டு இறுதியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை பணி முடிவடையாமல் மேம்பால கட்டுமானப் பணி மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இதனால் ஒரகடம் பகுதியில் தினமும் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
÷போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒரகடம் போலீஸôர், வண்டலூர் பகுதியில் இருந்து வாலாஜாபாத் செல்லும் வாகனங்களை சிங்கபெருமாள்கோயில் சாலை வழியாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
÷பின்பு சிங்கபெருமாள் கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள வல்லக்கோட்டை வழியாக மேட்டுப்பாளையம், பண்ருட்டி வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு மீண்டும் வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாகச் செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றியுள்ளனர்.
÷அதே போல் வாலாஜாபாத் பகுதியில் இருந்து வண்டலூர் செல்லும் வாகனங்களை ஒரகடம்- ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துணை மின்நிலையம் அருகே சென்று திரும்பி வரும் வகையில் போக்குவரத்தை மாற்றியுள்ளனர்.
÷இதனால் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள், வேலைக்கு செல்லும் அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
÷எனவே மந்த கதியில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.