பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: தவிக்கும் விவசாயிகள்!
சிதம்பரம், ஜன.12: புயலால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பெருத்த நஷ்டமடைந்துள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது என வேதனையுடன் உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே மேட்ட
சிதம்பரம், ஜன.12: புயலால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பெருத்த நஷ்டமடைந்துள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது என வேதனையுடன் உள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே மேட்டூரிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் குறிப்பாகக் காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் நீருக்கு பஞ்சமின்றி விவசாயிகள் முன்னதாக விதை விட்டனர்.
விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, உரத்தட்டுப்பாடு, மின்சார பற்றாக்குறை, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு இடையே நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் சம்பா நெல் பயிரிட்டனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் டிசம்பர் 30-ம் தேதி ஏற்பட்ட புயலில் முற்றிலும் சேதமுற்று பதரானது. நெற்பயிர் மட்டுமின்றி கரும்பு, வாழை, மணிலா, வெற்றிலை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட வேளாண் விளைபயிர்கள் அனைத்தும் சேதமுற்றன.
இதனால் பெருத்த நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனைக் கூட திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பன்னீர் கரும்பு, மஞ்சள், வாழை, தென்னை, பூக்கள் ஆகியவை முற்றிலும் சேதமுற்றுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்துத் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் மா.கோ. தேவராசன் தெரிவித்தது: பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் பயிர் சேத கணக்கீடு சரியாக எடுக்கப்படவில்லை.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பயிரிட விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது.
எனவே தமிழக அரசு அறிவித்துள்ள ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை போதுமானது இல்லை. மேலும், கடந்த ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது விவசாயிகளுக்கு மேலும் வேதனையளிக்கிறது.
குறிப்பாகக் கடந்த ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குமராட்சி பிர்காவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சிதம்பரம் பிர்காவில் உள்ளதால் பயிர் காப்பீடு பெறமுடியாமல் அப்பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
எனவே மேற்கண்ட கிராமங்களை குமராட்சி பிர்காவில் சேர்த்து விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பயிர் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.120-ல் இருந்து ரூ.600-ஆக உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் யாரும் இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருதி தமிழக முதல்வர் நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்.
புதுச்சேரி அரசு போன்று விவசாயிகளின் பயிர் காப்பீடு தொகையை அரசே செலுத்த வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் என்றார் தேவராசன்.