முகப்பு
தமிழ்நாடு

பயணிகள் நிழற்குடை: தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

செஞ்சி, ஜூலை 12: செஞ்சி பஸ் நிலையத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை பயணிகளின் பயன்பாட்டுக்கு இல்லாமல், தனியார் வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிக் கடைகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இந்த

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

செஞ்சி, ஜூலை 12: செஞ்சி பஸ் நிலையத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை பயணிகளின் பயன்பாட்டுக்கு இல்லாமல், தனியார் வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிக் கடைகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.

இந்த நிழற்குடை, விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

செஞ்சி பஸ் நிலையத்தில் நீண்டக்காலமாக நிழற்குடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை மற்றும் கோடை காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக, செஞ்சி பஸ் நிலையத்தில் ரூ. 20 லட்சத்தில் நிழற்குடை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

முதலில், பஸ் நிலையத்தின் வலது புறம் அமைந்துள்ள வணிக வளாகம் அருகே நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், இந்த இடத்தில் வணிக வளாகம் உள்ளதாலும், மேலும் இங்கு நிழற்குடையை அமைத்தால் பஸ் நிற்க இடமின்றி போகும் எனக் காரணம் காட்டி அப்பணி மேற்கொள்ளப்படாமல் தடுக்கப்பட்டது.

இதையடுத்து, பஸ் நிலையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள இடத்தில் நிழற்குடையை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ரூ. 20 லட்சம் செலவில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது.

ஆனால் தளம் அமைக்கப்படாததால், பயணிகள் உட்காராவோ, நிற்கவோ முடியாத நிலை உள்ளது. இதைப் பயன்படுத்தி, தனியார் வாகனங்கள், வேன், கார் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில், அழுகிய காய்கறிகள், குப்பைகள் ஆகியவைக் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடான நிலையில் செஞ்சி பஸ்நிலையம் உள்ளது.

இதனிடையே, மாலை நேரங்களின் மாடுகளின் கூடாரமாகவும் இந்த நிழற்குடைப் பகுதி மாறிவிடுகிறது. சில நேரங்களில் இவை, பயணிகளையும் முட்டிக் காயப்படுத்தி விடுகின்றன. இதனால், பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, இந்த நிழற்குடை, பயணிகளுக்கு பயன்படாமல் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி, பயணிகளுக்கான நிழற்குடையை பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் மாற்றி, இதனைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →