முகப்பு
தமிழ்நாடு

கல்விக் கடன் பெறுவதற்கு போராடும் மாணவர்கள்!

சென்னை, ஜூன் 10: உயர் படிப்புக்காக வழங்கப்படும் கல்விக் கடனைப் பெறுவதற்கு ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள் வங்கிகளுடன் தொடர்ந்து போராடும் சூழ்நிலை நிலவுகிறது. பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்கள் இப்போது பல

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

சென்னை, ஜூன் 10: உயர் படிப்புக்காக வழங்கப்படும் கல்விக் கடனைப் பெறுவதற்கு ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள் வங்கிகளுடன் தொடர்ந்து போராடும் சூழ்நிலை நிலவுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்கள் இப்போது பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்காக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் வங்கிக் கல்விக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு தாங்கமுடியாத பாரமாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பதற்கு வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதே ஏழை பெற்றோருக்கு இருக்கும் ஒரே வழி.

Advertisement

ஆனால் வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். வங்கி விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெறலாம். ஆனால், சில வங்கிகள் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்கின்றன. இதற்கு வங்கிகள் சொல்லும் காரணம், கலைப் படிப்புகளுக்கு எளிதில் வேலை கிடைக்காது, ஆகையால் கடன் வழங்குவதில்லை என்று கூறுகின்றன.

ஆனால், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு என்று மத்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மீறப்படும் நெறிமுறைகள்: மத்திய ரிசர்வ் வங்கியின் விதியின்படி உத்தரவாதம் இல்லாமல் ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கலாம்.

ஆனால், ரூ.2 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்குகூட, ரூ.5 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரத்தை வைத்து கடன் வாங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பொதுவாக ஒரு மாணவன் வங்கியில் கல்விக் கடன் பெறுவதற்கு, தான் சேர விரும்பும் கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கி வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், கல்விக் கடனுக்கான காசோலையை கல்லூரி பெயரில் வங்கி நிர்வாகம் வழங்கும்.

ஆனால், நடைமுறையில் இதற்கு நேர்மாறாகவே கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணத்துக்கு, ஒரு மாணவனுக்கு ஓர் ஆண்டுக்கான கல்விச் செலவு ரூ.1 லட்சம் ஆகும் என்று விண்ணப்பித்தால். வங்கியில் இருந்து ரூ.52 ஆயிரம் மட்டுமே கிடைப்பதாக மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

மேல் படிப்புக்கும் இதே நிலைமை: முதுகலைப் படிப்பு அதாவது எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது இளங்கலை படிப்பில் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்து டிகிரி முடித்திருந்தாலும், இந்தக் காரணத்தை வங்கிகள் சுட்டிக்காட்டி கடன் வழங்க மறுக்கின்றன.

கல்விக் கடன் பெறுவதற்கு ஒருவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அதுவே போதுமானது, ஆனால் இதனையும் வங்கிகள் பொருட்படுத்தவில்லை.

வங்கிகளின் தயக்கத்துக்கு காரணம்: கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியது: சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.

மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக்கடன் அதிகரிக்கின்றன. இதனால் வங்கியின் மேலாளருக்கு வேலை பளு அதிகரிக்கும்.

இதன் காரணமாகவே வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவில் கொடுத்து வருகின்றன.

கொடுக்கும் கடன் மீண்டும் திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும், வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது.

படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments