தமிழ்நாடு

நிதியின்றி தாமதமாகும் "நான்மாடக்கூடல்' பணி

மதுரை: தமிழ் கலாசாரத்தை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் மதுரையில் அமைக்கப்பட்டுவரும் நான்மாடக்கூடல் பணிகள் போதிய நிதி அளிக்கப்பட்டாலே முழுமைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.  சங்கம் வைத்து தமி

ஜெயப்பாண்டி

மதுரை: தமிழ் கலாசாரத்தை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் மதுரையில் அமைக்கப்பட்டுவரும் நான்மாடக்கூடல் பணிகள் போதிய நிதி அளிக்கப்பட்டாலே முழுமைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த கலாசார நகராக மதுரை திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்க மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழின் கலாசார, பண்பாட்டை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

 தமிழ்ச் சங்கம் தொடங்குவதற்காக மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில், சட்டக் கல்லூரி அருகே சுமார் 14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுமார் ரூ.100 கோடிக்கு அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

 இந்த நிலையில், தமிழின் வரலாற்றைத் தெரிவிக்கும் அரிய கல்வெட்டு ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் என மதுரையின் தொன்மையை விளக்கும் வகையில் நான்மாடக்கூடல் அரங்கு கட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 இதற்கான கருத்துருவும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு ரூ.50 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது. அதன்படி, காந்தி மியூசியம் எதிரே யூனியன் கிளப் அருகில் 58 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.

 கடந்த நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது அக் கட்டடப் பணிகளில் தரைத்தளப் பணி முடியும் தருவாயில் உள்ளது. மதுரை நகரின் வரலாற்றை விளக்கும் புகைப்படங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் பெரிய அறையும், அதையொட்டி, நுழைவுக் கட்டணத்துக்கான அறையும் கட்டப்பட்டுள்ளன.

 இன்னும் சில பணிகள் நிறைவுற்றால்தான் பொதுமக்கள் முழுமையாக கட்டடத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.

 தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநருக்கான அறை உள்ளிட்டவையும் உள்ளன. முதல் தளப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், அதில் கழிப்பறை வசதி இல்லை. அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர்.

 மாவட்ட நிர்வாகம் நிதியை அளித்தாலே கழிப்பறை வசதி செய்து விடலாம் எனக் கூறும் பொதுப் பணித் துறையினர், கட்டடத்துக்கான சுற்றுச்சுவர் கட்டப்படுவதற்கும் ரூ. 25 லட்சம் தேவை என்கின்றனர்.

 இந்நிலையில் மையத்தில் மேல்தளம் அமைக்க கூடுதலாக ரூ.50 லட்சம் தேவை என அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிதி அளிக்கப்பட்டாலே சுற்றுச்சுவர் கட்டவும், பள்ளமான பகுதிகளை மேடாக்கி சீராக்கவும் முடியும் என்கிறார்கள் பொதுப்பணித் துறையினர்.

 இப் பணிகளை விரைவுபடுத்தி வருங்காலத் தலைமுறைக்கு தமிழின் சிறப்பை அறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT