குமரி திருவள்ளுவர் சிலை கைப்பகுதி உப்புக்காற்றால் சேதம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் கைப் பகுதி உப்புக்காற்றால் சேதமடையத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் கைப் பகுதி உப்புக்காற்றால் சேதமடையத் தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
இந்த சிலை சென்னை வள்ளுவர் கோட்டத்தை நிர்மாணித்த மறைந்த கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டது.1.1.2000 அன்று இந்த சிலையை அப்போதைய தமிழக முதல்வரான மு.கருணாநிதி திறந்து வைத்தார்.
சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானை சிற்பங்கள் சிலைக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. சிலையின் உள்பகுதியில் அதிகாரத்துக்கு ஒரு குறள் வீதம் 133 குறள்பாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
ரூ. 10 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த சிலை மொத்தம் 7000 டன் கொண்டதாகும். சிலையை முழுமையாக வடிவமைக்க 3681 கருங்கல் பாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 38 அடி உயரத்தில் பீடமும், 95 அடி உயரத்தில் சிலையும் சேர்த்து 133 அடி உயரமாகும். உலகிலேயே இது போன்ற கருங்கற்களால் ஆன பெரிய சிலை வேறெங்கும் கிடையாது என்பது இதன் சிறப்பம்சமாகும். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி அலைகளால் கூட சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய செய்தியாகும். திருவள்ளுவர் சிலையை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை இயக்கி வருகிறது.
கடல் காற்றினாலும், மழை மற்றும் வெயிலாலும் சிலை பாதிக்கப்படாத வகையில் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலிசிலிக்கான் என்ற ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும். இதன்படி சிலை அமைக்கப்பட்ட பின்னர் 2004-ம் ஆண்டு ரூ. 35 லட்சத்தில் ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதையடுத்து ஓராண்டு காலம் தாமதமாக கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ. 76 லட்சத்தில் இரும்புக் கம்பிகளால் சாரம் அமைத்து சிலை முழுக்க ரசாயனக் கலவை பூசப்பட்டது. இந்த பணி தொடர்ந்து 135 நாள்கள் நடைபெற்றது.
இதேபோல தற்போதும் 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரசாயனக் கலவை பூசப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் இதுவரைதொடங்கப்படாததால் சிலையின் உள்பகுதி உப்புக்காற்றினால் சேதமடைந்துக் காணப்படுகிறது.
தற்போது சிலையின் வெளிப் பகுதியிலும் (கைப்பகுதி) உப்பு படிவம் படிந்துள்ளதால் சிலை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் சிலை மேலும் பாதிப்புக்குள்ளாகும் என தமிழ் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
எனவே, சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த சிலையில் உடனடியாக ரசாயனக் கலவை பூச தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.