முகப்பு
தமிழ்நாடு

குண்டும் குழியுமான சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலை

 சிதம்பரம், மே 8: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லுவோர் கடும் அவத

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

 சிதம்பரம், மே 8: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லுவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 ÷சிதம்பரத்தில் காட்டுமன்னார்கோயில் சுமார் 23 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. தாலுக்கா தலைநகரமாக உள்ள காட்டுமன்னார்கோயிலைச் சுற்றி சுமார் 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் 80 சதவீதம் பேர் விவசாயத் தொழிலையே நம்பியுள்ளனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருள்கள் வாங்கவும், குழந்தைகள் கல்வி பயிலவும் தினமும் சிதம்பரம் நகருக்கு வந்துசெல்கின்றனர். ஆனால் சிதம்பரம்-காட்டுமன்னாகோயில் பகுதிக்கு போதிய பஸ் வசதி கிடையாது. இதனால் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடியே பயணிகள் செல்லும் நிலை உள்ளது.

 ÷இந்நிலையில் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக பொய்யாப்பிள்ளைச்சாவடி, பூலாமேடு, தவர்த்தாம்பட்டு, குமராட்சி பாலம், கீழவன்னியூர், மேலவன்னியூர், சிறகிழந்தநல்லூர், திருநாரையூர், வீரநத்தம், லால்பேட்டை, லால்பேட்டை கைகாட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் மிகப்பெரிய குழிகள் உள்ளதால் அவ்வழியே வாகனங்களில் பயணிப்பவர்கள் உடல்ரீதியாக சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகின்றனர்.

 ÷இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அக்குழியில் விழுந்து நாள்தோறும் விபத்துக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழியில் விழுந்து செல்லும் நிலை உள்ளது. இச்சாலை வழியே ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் காட்டுமன்னார்கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பலமுறை சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

 எனவே நெடுஞ்சாலைத் துறையினர் பொதுமக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெரிய குழிகளை சீரமைத்து சாலையைச் செப்பனிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.