முகப்பு
தமிழ்நாடு

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி முடங்கும் அபாயம்

சென்னைத் துறைமுகம் வழியாக நடைபெற்று வரும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் படிப்படியாக முடங்கி வருவதாக ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி முடங்கும் அபாயம்

சென்னைத் துறைமுகம் வழியாக நடைபெற்று வரும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் படிப்படியாக முடங்கி வருவதாக ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

சென்னைத் துறைமுகம் வழியாக நடைபெற்று வரும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் படிப்படியாக முடங்கி வருவதாக ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டிய தாவரப் பாதுகாப்புத் துறையினர் தேவையற்ற காலதாமதம் செய்வதே இதற்குக் காரணம் என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 2.60 லட்சம் கன்டெய்னர்கள்: சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு 2.6 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதில் வேளாண் விளைபொருள்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.

மக்காச்சோளம், வெங்காயம், அரிசி, மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவை மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கன்டெய்னர்கள் வரை சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல் மரங்கள், மரக் கட்டைகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், உளுந்து, துவரை, பட்டாணி, சுண்டக் கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள், அலங்காரப் பூக்கள் என ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் கன்டெய்னர்கள் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்தத்தில் வேளாண் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை: வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்று அளிக்க வேண்டும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் எந்த கன்டெய்னரையும் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள்.

தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சான்று வழங்கும் நடைமுறைகளில்தான் தற்போது தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாகவும், முன்பு ஓரே நாளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தற்போது ஐந்து நாள்கள் வரை காலதாமதம் ஆகின்றன. இதற்கு அதிகாரிகள் தரப்பில் தெளிவான பதில் இல்லாத நிலையில் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி விரைவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதி முடங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்: இது குறித்து சென்னை மக்காச்சோளம் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது:

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்து வருகிறது. ஏற்றுமதியில் லாபம் குறைவுதான் என்றாலும் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் பரவாயில்லை என்ற நிலை இருந்துவந்தது. ஏற்கெனவே கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் இத்தொழில் நலிவடைந்து விட்டது. இந்நிலையில் தாவரப் பாதுகாப்புத் துறையினர் தற்போது மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இத்தொழில் முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்டெய்னருக்கு சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை மட்டுமே லாபம் கிடைத்து வந்த நிலையில், தற்போதைய பிரச்னையால் இந்த லாபத்தையும் இழந்து விட வேண்டியதுதான். எனவே இது குறித்து வர்த்தத் துறை அமைச்சகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

இப்பிரச்னை குறித்து வெங்காயம் ஏற்றுமதி செய்யும் கிருபாகரன் கூறியது:

தாமதத்தினால் வெங்காயம் அழுகிவிடும் எனவும், அதிகரிக்கும் செலவினங்களால் மக்காச்சோளம் உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி முடங்கும் அபாயம் உள்ளது என விளக்கமாக எடுத்துரைத்தாலும் பயன் இல்லை. அதைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லாததுபோலவும், அதிகாரத்தைச் செயல்படுத்துவது மட்டுமே தங்களது கடமையாகவும், இங்கு கேள்வி கேட்பதற்கு இடமில்லை என்ற மனப்பான்மைதான் இந்த அதிகாரிகளிடம் நிலவுகிறது.

இரண்டு மாதங்கள் முன்புவரை இல்லாத பிரச்னைகள் இப்போது மட்டும் ஏன்? இதற்கான காரண காரியங்கள் தாவரப் பாதுகாப்புத் துறை மண்டல அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்பிரச்னை குறித்து இத்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்பதே உண்மை என்றார் கிருபாகரன்.

கன்டெய்னர் லாரிகள் நெரிசல், போதிய கிடங்கு வசதிகள் இல்லாமை, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னைத் துறைமுகம் மூலம் நடைபெற்று வந்த வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தாவரப் பாதுகாப்புத் துறையின் மெத்தனத்தால் மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →