முகப்பு
தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் செஞ்சி அருணாசல ஈஸ்வரர் குளம்!

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோயில்

Updated On : 13 அக்டோபர் 2012, 1:07 am IST
பகிர்:

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோயில் குளத்தை மீட்டு பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 செஞ்சி நகரம் பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய நகரம். செஞ்சிக் கோட்டையை உருவாக்கிய கோணார்கள் முதல் கடைசியாக ஆட்சி செய்த மாமன்னன் தேசிங்குராஜன் வரை செஞ்சிக் கோட்டையின் வரலாற்றை பறைசாற்றிக்கொண்டிருக்கும் செஞ்சியில் சிறப்புமிக்க பல கோயில்கள் உள்ளன. இவை பெரும்பாலும் வழிபாடுகள் இல்லாமல் இருந்தாலும், தற்போது சில கோயில்களில் புனரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தற்போது செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயம் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

இதேபோல் செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாசல ஈஸ்வரர் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த 2007-ல் தொடங்கப்பட்டு தற்போது முடியும் தறுவாயில் உள்ளது. இக்கோயில் 600 ஆண்டு காலம் பழமைவாய்ந்த கோயிலாகும்.

Advertisement

Advertisement

 கடந்த  2007-ம் ஆண்டு முதல் இக்கோயிலில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடியும் தறுவாயில் உள்ளது. 3 நிலை வாயில் கோபுரம், 5 நிலை ராஜகோபுரம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் எதிரே மிக பிரம்மாண்டமான குளம் அமைந்துள்ளது. இந்த குளம், தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சீரற்ற நிலையில் காணப்படுகிறது. குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளால் குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குளம் கழிவுநீர் குட்டை போல் காணப்படுகிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர் மாசுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 குளத்துக்கு செஞ்சிக் கோட்டை சர்க்கரை குளத்தில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயும் தற்போது அடைக்கப்பட்டுவிட்டது. இதனால் இக்குளத்திற்கு வரும் நீர் தடைபட்டுள்ளது. இதுவும் குளத்தின் நீர் மாசடைய முக்கியக் காரணமாகும். எனவே, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து இக்குளத்தை மீட்டு அதை தூர்வாரி மீண்டும் அதற்கு நீர் வரும்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செஞ்சி நகர மக்களின் வேண்டுகோளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.