வழியா இல்லை பூமியில்?
கடலுக்குள் சென்று மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் மீனவர்கள் மத்தியில், கடற்கரையில் மீன்களை வெட்டி குடும்பத்தை நடத்தும் மீனவர்களின் வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கிறது.
கடலுக்குள் சென்று மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் மீனவர்கள் மத்தியில், கடற்கரையில் மீன்களை வெட்டி குடும்பத்தை நடத்தும் மீனவர்களின் வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கிறது.
கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரைப் பகுதியை தங்கு தளமாகக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வள்ளங்களில் மீன்பிடித்து வருகின்றனர். அதிகாலை மீன்பிடிக்கச் செல்லும் இவர்கள் காலை 7 மணிக்கு மேல் கரை திரும்புகின்றனர்.
விலை உயர்ந்த சீலா, இறால், வேளா பாறை, கணவா, வெளமீன் முதல் விலை குறைந்த சாளை, நெத்திலி மீன்கள் வரை இங்கு தாராளமாகக் கிடைக்கிறது.
வலையில் பிடிக்கப்பட்டு சில மணி நேரங்களில் கரைக்கு கொண்டுவரப்படுவதால் உயிர் துடிப்புடன் கிடைக்கும் இம்மீன்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் காலை 6 மணிக்கே மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்துவிடுகின்றனர்.
இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை ஏலத்தில் எடுக்கும் மக்கள் அங்கேயே வெட்டி வாங்கிச் செல்கின்றனர்.
இதற்காகவே வகை வகையான கத்தி, அரிவாளுடன் தனியாக மீனவர்கள் உள்ளனர். மீன்களை வெட்டித் தருவது ஒரு தொழிலாகவே நடைபெறுகிறது. இந்தத் தொழில் குறித்து கோவளத்தைச் சேர்ந்த மீனவரான மோசஸ் (57) கூறியதாவது: வாவத்துறையில் மீன்களை ஏலத்தில் எடுக்கும் கடை வியாபாரிகள், பொதுமக்கள் எங்களிடம் மீன்களை வெட்டி வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் விருப்பத்துக்கு தக்கவாறு மீன்களை வெட்டி துண்டுகளாக்கி தருகிறோம். சிறிய வகை மீன்களுக்கு ரூ. 10 முதல் ரூ.25 வரையிலும், வேளா பாறை, சீலா உள்ளிட்ட பெரிய வகை மீன்களை வெட்ட ரூ.50 முதல் ரூ.100 வரையும் கூலியாக கிடைக்கிறது.
நாள்தோறும் ரூ.400 முதல் ரூ.600 வரை சம்பாதிக்கிறேன்.
இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் குழந்தைகளைப் படிக்கவைத்து திருமணமும் செய்து கொடுத்துள்ளேன்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன் என்றார்.
இப்பகுதியில் மேலும் சிலரும் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.