முகப்பு
தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத விளையாட்டுச் சங்கங்கள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத விளையாட்டுச் சங்கங்களால் ஏராளமான விளையாட்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:41 AM
பகிர்:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத விளையாட்டுச் சங்கங்களால் ஏராளமான விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை பாழாகி வருகிறது.

தமிழக ஒலிம்பிக் சங்கமே இதற்கு முக்கியக் காரணம் என்று விளையாட்டு வீரர்களும், பல்வேறு விளையாட்டுச் சங்க நிர்வாகிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுகளை நிர்வகிப்பதற்காக மாநில விளையாட்டுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு விளையாட்டை நிர்வகிக்க ஒரு சங்கத்துக்கு மட்டுமே மாநில ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்படும்.

ஆனால், தமிழகத்தில் ஒரு விளையாட்டுக்கு இரண்டு, மூன்று சங்கங்கள் உள்ளன. அவையனைத்துமே, தங்களுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் இருப்பதாகக் கூறி வருகின்றன.

ஒரு தரப்பினர் நாங்கள்தான் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ தாங்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் என்கிறார்கள். தனித்தனியாக போட்டியும் நடத்துகிறார்கள். 

அங்கீகாரம் இல்லாத விளையாட்டுச் சங்கங்களுக்கும் சென்னை நேரு மைதானம் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான மைதானங்களில் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு மைதானங்களில் போட்டியை நடத்தினால் அது அங்கீகாரம் பெற்ற சங்கமாக இருக்கும் என்று வீரர், வீராங்கனைகள் நம்பிவிடுகிறார்கள். 

பெரும்பாலான அங்கீகாரம் இல்லாத சங்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்களின் சங்கத்துக்கு தலைவராக நியமித்துக் கொள்கின்றன. சில சங்கங்கள் பயிற்சியாளர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் மூலம் வீரர்களை இழுக்கின்றன. இதுபோன்ற காரணங்களாலும் வீரர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.  

போட்டியின் தொடக்க விழாவுக்கு அமைச்சர்கள் வராவிட்டாலும், அவர்களின் அனுமதியோடு அவர்களுடைய பெயர்களை போட்டிக்கான அழைப்பிதழில் அச்சிடும் சங்கங்கள், அதன்மூலம் ஸ்பான்சர்களை பிடிப்பதோடு, வசூல் வேட்டையும் நடத்துவதாக வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   

வெகுதொலைவில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பெரிய அளவில் செலவு செய்து சென்னை போன்ற பெருநகரங்களில் வந்து போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

ஆனால் அந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பது தெரியவரும்போதும் பெரும்பாதிப்புக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பொறியியல் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு வரும்போதுதான் தங்களிடம் உள்ள சான்றிதழ் செல்லத்தக்கது அல்ல என்பதை நிறையபேர் தெரிந்து கொள்கின்றனர். 

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் 500 இடங்களும், மருத்துவத்தில் 3 இடங்களும் விளையாட்டுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிதி உள்ளிட்ட போதிய வசதிகள் இன்றி விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாத நிலை வரும்போது படிப்பையாவது தொடரலாம் என்று நினைத்து கவுன்சிலிங் வருபவர்களுக்கு, அங்கீகரிக்கப்படாத சான்றிதழ் காரணமாக அங்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இளம் வயதில் இருந்து கடுமையாகப் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் பல வீரர்கள் வைத்திருக்கும் சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்டதல்ல என்று கூறி திருப்பியனுப்பப்படுகின்றனர்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு யார் காரணம் என்று கேட்டால், தமிழக ஒலிம்பிக் சங்கமே என்ற பதில்தான் எல்லோரிடம் இருந்தும் வருகிறது. "எந்தெந்த விளையாட்டுச் சங்கங்கள் தங்களால் அங்கீகரிக்கப்பட்டவை என்பது உள்ளிட்ட எந்தத் தகவலையும் தமிழக ஒலிம்பிக் சங்கம் வெளியிடுவதில்லை. மாநில விளையாட்டுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, இந்த சங்கம்தான் அங்கீகரிக்கப்பட்டது, இவர்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் என்பதை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தலாம்.

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடலாம். ஆனால், தமிழக ஒலிம்பிக் சங்கத்துக்கு என்று தனி இணையதளம் எதுவும் கிடையாது. தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் செயல்படாத நிலைதான் ஒட்டுமொத்த வீரர்களும் போலிச் சங்கங்களின் பிடியில் சிக்குவதற்கு முக்கியக் காரணம்' என்று வேதனையோடு தெரிவித்தார் முன்னாள் சர்வதேச வீரர் ஒருவர்.

இது தொடர்பாக எஸ்.டி.ஏ.டி. அதிகாரி ஒருவர் கூறுகையில், "சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது மற்றும் நிர்வாகிகள் மாற்றப்படுவது தொடர்பாக ஒலிம்பிக் சங்கத்தினர்  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை' என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் முருகனை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பியபோதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மாநில ஒலிம்பிக் சங்கத்தின் செயல்படாத நிலையைப் பயன்படுத்தி போலி சங்கங்கள் வீரர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கணினியின் வளர்ச்சி கார் போகாத குக்கிராமத்தையும் எட்டிவிட்ட தற்போதைய சூழலில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்துக்கு என்று ஒரு இணையதளம்கூட இல்லை என்பதில் இருந்தே அவர்களின் செயல்பாடு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.

விளையாட்டுத் துறைக்காக தமிழக முதல்வர் பல கோடி ரூபாய்களை ஒதுக்கி பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் தற்போதைய நிலை காரணமாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே போதிய நடவடிக்கைகள் எடுத்து வருங்கால சாம்பியன்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!

கேள்விக்குறியாகும் எதிர்காலம்
கடந்த நவம்பரில் ஹைதராபாதில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கச் சென்ற தமிழக வீரர்கள் 10 பேர், அங்கீகாரம் இல்லாத சங்கத்தின் மூலமாக வந்ததாகக் கூறி திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அணியைச் சேர்ந்தவர்கள்.

சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பரத் கூறுகையில், "துளசி என்பவர் செயலராக உள்ள சங்கத்தின் மூலம்தான் இதற்கு முன்பு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றோம். அதே சங்கத்தின் மூலம்தான் ஹைதராபாதுக்கும் சென்றோம். ஆனால் அங்கு நாகராஜ் என்பவர் செயலராக உள்ள சங்கத்துக்குத்தான் அங்கீகாரம் உள்ளது என்று கூறி எங்களை விளையாட அனுமதிக்கவில்லை.

5 பதக்கங்கள் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு சென்றோம். ஆனால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்களை அனுமதிக்கும்படி போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கெஞ்சியபோதும் பலனில்லை. வேறு வழியின்றி அன்று மாலையே வேதனையோடு சென்னை திரும்பினோம்.

நாங்கள் இடம்பெற்றிருந்த சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொருவரும் தாங்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தினர் என்று கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் யாரை நம்புவது? தற்போது அங்கீகாரம் உள்ள சங்கத்தினர் எங்களை சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார். 

எஸ்டிஏடி குத்துச்சண்டை பயிற்சியாளர் செந்திலிடம் இது தொடர்பாக கேட்டபோது, "குத்துச்சண்டை சங்கத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இரு சங்கங்கள் உள்ளதால் ஏற்கெனவே உள்ள சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதும், வேறு சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதும் ஹைதராபாத் சென்ற பிறகுதான் தெரிந்தது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.