தமிழ்நாடு

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சென்னையில் 20 ஆயிரம் கட்டடங்கள்

சென்னையில் தீயணைப்புத்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தடையில்லா சான்றிதழ் பெறாமல் 20 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. சுமார் ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளன.

கே.வாசுதேவன்

சென்னையில் தீயணைப்புத்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தடையில்லா சான்றிதழ் பெறாமல் 20 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. சுமார் ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளன.

கோயம்புத்தூரில் ஒரு தனியார் கட்டடத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் இறந்தனர். இந்த விபத்துக்கு பின்னர் அந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவை இணைந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறாத கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில் மாநிலத்தின் பிற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் கட்டடங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் உச்சபட்சமாக மீறப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

15 மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்கள் தீயணைப்புத்துறை வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப கட்ட வேண்டும் என்று அரசின் விதிமுறை உள்ளது. தீயணைப்புத்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றினால்தான், அந்த துறை வழங்கும் தடையில்லா சான்றிதழின் அடிப்படையில் உள்ளூர் திட்ட குழுமம் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் அனுமதியைப் பெற முடியும்.

ஆனால், சென்னையைப் பொருத்தவரையில் 15 மீட்டர் உயரத்துக்கு மேல் சுமார் 21 ஆயிரம் கட்டடங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தீயணைப்புத்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளதாக தீயணைப்புத்துறை கூறுகிறது.

விதிமுறைகளை மீறி 20 ஆயிரம் கட்டடங்கள்: சென்னையில் சுமார் 20 ஆயிரம் கட்டடங்கள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி கட்டப்படாமல், தடையில்லா சான்றிதழ் இல்லாமல் இருப்பதாக தீயணைப்புத்துறையினர் கூறுகின்றனர். இந்த விதிமுறை மீறலில் வணிக கட்டடங்களே அதிகம் உள்ளது. இதற்கு அடித்தப்படியாக பல அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரி கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களில் சிறிய விபத்துகள் ஏற்பட்டால்கூட பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்கு ஆபத்து இருப்பதாக சென்னையைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரி கூறுகிறார். ஆனால் விதிமுறை மீறலின் ஆபத்தை கட்டடங்களின் உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தீயணைப்புத்துறைக்கு அதிகாரம் கிடையாது. இந்த கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னையைப் பொருத்த வரையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால், அந்த வளர்ச்சி குழுமம், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எந்தவொரு கட்டடத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

எனவே, இப் பிரச்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால், நடவடிக்கை எடுக்க தீயணைப்புத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் தீயணைப்புத்துறையின் நடவடிக்கைக்கு எந்தவித இடையூறையும் அரசு கொடுக்கக் கூடாது எனவும் அவர்கள் கருத்து கூறுகின்றனர்.

என்னென்ன விதிமுறைகள் ?

தீயணைப்புத்துறையின் பாதுகாப்பு விதிமுறைப்படி, கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்டிப்பாக அவசர வழி இருக்க வேண்டும், நீர்தெளிப்பான் இருக்க வேண்டும், புகைப்போக்கி இருக்க வேண்டும், தீயைக் கண்டறியும் கருவி இருக்க வேண்டும், கட்டடத்தை சுற்றி தேவையான அளவு வெற்றிடம் இருக்க வேண்டும், தீயணைப்பு வாகனங்களில் எளிதில் கட்டடத்தின் அருகே செல்லும் வகையில் வழி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகள் குடியிருப்பு கட்டடங்கள், வணிக கட்டடங்கள், தொழிற்சாலை கட்டடங்கள் என கட்டடங்களுக்கு ஏற்றார்போல சில மாற்றங்களுடன் இருக்கின்றன. ஒரு கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய வரைப்படத்தைத் தயாரிக்கும்போது பாதுகாப்பு விதிமுறைப்படி அது வரையப்பட்டிருக்க வேண்டும் என தீயணைப்புத்துறையின் விதிமுறைகளை கூறுகிறது.

அந்தக் கட்டட வரைபடத்துக்கு தீயணைப்புத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே, கட்டடம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும். கட்டடம் முழுமையாக கட்டி முடித்த பின்னரே, தீயணைப்புத்துறை அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பின்னர், அந்த கட்டடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழுக்கு பின்னரே உள்ளூர் வளர்ச்சி திட்ட குழுமம் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சான்றிதழை பெற முடியும். ஆனால், இப்போதுள்ள நிலையில் இந்த விதிமுறைகளை பெரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT