முகப்பு
தமிழ்நாடு

வறண்டுவிட்ட மாமண்டூர் பாசன ஏரி

வரலாற்றுச் சிறப்புமிக்க மாமண்டூர் பாசன ஏரி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

வரலாற்றுச் சிறப்புமிக்க மாமண்டூர் பாசன ஏரி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மாமண்டூர் பாசன ஏரி கி.பி. 6-ம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் கால த்தில் உருவாக்கப்பட்டது. இயற்கையாக அமையப்பட்ட இரண்டு குன்றுகளுக்கிடையே கரை கட்டப்பட்டு இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

குன்று உள்பட ஏரிக்கரையின் நீளம் மூன்றரை கிலோமீட்டர் ஆகும். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் கரை அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையின் மேல் பகுதியில் உள்ள குன்றுகளில் பல்லவர் காலக் கோயில்கள் உள்ளன.

செய்யாறு தாலுகா வருவாய் எல்லையில் அமைந்துள்ள மாமண்டூர் ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெரிய ஏரியாகும்.

மாமண்டூர் பாசன ஏரிக்கு நீர் வருவதற்கு வசதியாக ராஜாக் கால்வாய், வடஇலுப்பை கால்வாய், தண்டரை அணைக்கட்டு கால்வாய் என நீர்வரத்துக் கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து ஏரிக்கு நேரடியாக நீர் வரும் முக்கிய கால்வாயாக ராஜா கால்வாய் விளங்குகிறது.வட இலுப்பைக் கால்வாயானது, செய்யாறை அடுத்த வடஇலுப்பை கிராமப் பகுதி பாலாற்றுப் படுகையில் மதகு அமைக்கப்பட்டு ஐயங்கார்குளம், நமண்டி, அரிகரப்பாக்கம் வழியாக வந்தடைகிறது.

மற்றொன்று, தூசி தென்னம்பட்டு பிரதானக் கால்வாய். இக்கால்வாய், ஆற்காட்டை அடுத்த புதுப்பாடிப் பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் தொடங்கி பாலாறு அணைக்கட்டு, ராந்தம் ஏரி, தென்னம்பட்டு ஏரி, பெரூங்கட்டூர், வெம்பாக்கம், திருப்பனமூர், கீழ்நெல்லி, அரிகரப்பாக்கம் வழியாக மாமண்டூர் ஏரிக்கு வந்தடைகிறது.

அதேபோல தண்டரை அணைக்கட்டுக் கால்வாய் செய்யாற்றுப் படுகையில் தொடங்கி அருகாவூர், வட தண்டலம், தும்பை, பல்லி, சித்தாத்தூர் வழியாக மாமண்டூர் ஏரிக்கு நீர் வந்தடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 13.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள மாமண்டூர் ஏரியில் நீரின் கொள்ளளவு 1,799 மில்லியன் கன அடியாகும். தூசி மேட்டு மதகு, பள்ள மதகு மூலம் 1,650 ஏக்கரும், மாமண்டூர் மேட்டு மதகின் மூலம் 1,401 ஏக்கரும், பள்ள மதகின் மூலம் 1,067 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

மாமண்டூர் ஏரியில் ஒரு முறை நீர் நிரம்பினால் நான்கு போகம் நெற்பயிர் சாகுபடி செய்யலாம். குறைந்தபட்சம் எட்டு மாதங்களுக்கு தண்ணீரை முழுமையாகப் பெற்று விவசாயம் செய்யலாம்.

மாமண்டூர் பாசன ஏரியால் தூசி, குரங்குணில்முட்டம், பல்லாவரம், கனிகிலுப்பை, மாமண்டூர், வட கல்பாக்கம், நரசமங்கலம், வாழவந்தல், கீழ்நாய்க்கன்பாளையம், திரிஞ்சாபுரம், மேனல்லூர் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ராஜா கால்வாய், வட இலுப்பைக் கால்வாய், தூசி தென்னம்பட்டு பிரதான கால்வாய், தண்டரை அணைக்கட்டுக் கால்வாய் அனைத்தும் பொதுப்பணித்துறை சார்பில் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இதனால் கால்வாய்களில் முள்செடி, கோரை என புதர் போல் வளர்ந்துள்ளன. கடந்த சில மாதங்களில் பெய்த மழையினால் தண்டரை அணைக்கட்டு கால்வாயில் நிரம்பிய நீர், செய்யாறு வழியாக கடல்பகுதிக்கு சென்று வீணாகியுள்ளது.

அதே போல், தண்டரை அணைக்கட்டிலிருந்து கால்வாய் மூலம் வந்த ஆற்று நீர், பாசன வசதி செய்யாத பரிதிபுரம், புளியரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் வந்து வீணாகத் தேங்கி இருப்பது விவசாயிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாமண்டூர் ஏரி முழுமையாக நிரம்பப் பெறாததால், விவசாயிகளில் பலர் வெவ்வெறு தொழிலில் கூலிகளாக காஞ்சிபுரம், சென்னை போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகளில் நீர் வரத்துக் குறைந்ததாலும், நீர்வரத்துக் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் மாமண்டூர் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது என இப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் பாலாற்று வடிநில நீர் கோட்ட எல்லையில் அமைந்துள்ள மாமண்டூர் பாசன ஏரி, பொதுப்பணித்துறை பராமரிப்பின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.