முகப்பு
தமிழ்நாடு

பில்லி, சூனியம் எடுக்க வந்த சாமியார் அடித்துக் கொலை: இளைஞர் கைது

திருவண்ணாமலை அருகே பில்லி, சூனியம் எடுக்க வந்த சாமியாரை அடித்துக் கொன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

திருவண்ணாமலை அருகே பில்லி, சூனியம் எடுக்க வந்த சாமியாரை அடித்துக் கொன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (36). திருமணமான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுரேஷூக்கு சிலர் பில்லி, சூனியம் வைத்து விட்டனர். இத்துடன் தோஷமும் இருக்கிறது.

எனவேதான், சுரேஷால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. சாமியாரை அழைத்துவந்து பில்லி சூனியத்தை எடுத்துவிட்டால் சுரேஷ் வாழ்க்கையில் முன்னேறுவார் என்று ஊர் பொதுமக்கள் சிலர் கூறினராம். இதையடுத்து, தோஷம் கழிக்கவும், பில்லி சூனியத்தை எடுக்கவும் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாமியார் அரிகிருஷ்ணன் (45) என்பவரை சுரேஷ் குடும்பத்தினர் அண்மையில் அழைத்து வந்தனர்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) திருவண்ணாமலையை அடுத்த மேலத்திகான் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு சாமியார் அரிகிருஷ்ணன், சுரேஷ், மணி உள்ளிட்டோர் சென்றனர். சுடுகாட்டின் மையப் பகுதியில் சுரேஷை அமரச் செய்த சாமியார் அரிகிருஷ்ணன் அவருக்கு தாயத்து கட்டி பூஜைகள் செய்யத் தொடங்கினார். அப்போது, திடீரென ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த கட்டையால் சாமியாரை சரமாரியாகத் தாக்கினாராம். படுகாயமடைந்த சாமியார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சாமியார் அரிகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இதையடுத்து, இவ் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.