வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் அப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை வனப் பகுதிகளில் அதிகளவில் சிறுத்தைகள் உள்ளன. தேயிலைத் தோட்ட பகுதிகளில் மட்டும் நடமாடி வந்த சிறுத்தைகள் தற்போது வால்பாறை டவுன் பகுதிகளுக்கும் இரவு நேரத்தில் வந்து செல்கின்றன.
இதில், வால்பாறை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள வாழைத்தோட்டம் பகுதிக்கு தினந்தோறும் சிறுத்தை ஒன்று வந்து செல்வதாகவும், இது வரை அப் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட நாய், கோழி, மாடு போன்றவைகளை அடித்து கொன்றுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் தனியாக செல்வதையே அப் பகுதியினர் தவிர்த்து வருகின்றனர். இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கூண்டு வைத்துள்ளனர். ஆனால், கூண்டு வைத்து ஒரு மாதம் ஆகியும் சிறுத்தை அகப்படவில்லை.
இந் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் ஜோசப் என்பவரின் நாயை சிறுத்தை கடித்து குதறி, குசலவன் என்பவரது வீட்டின் மாடியில் கொண்டு போய் போட்டுள்ளது. புதன்கிழமை காலை அப் பகுதியில் படிந்திருந்த ரத்தக் கரையை பார்த்து அங்கு குடியிருப்போர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ÷இது குறித்து அப் பகுதியில் வசிக்கும் வி.எம்.தியாகராஜன் கூறியது:
சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியவில்லை. மக்களிடம் அச்ச உணர்வை போக்க வனத்துறையினர் கூண்டு வைக்கின்றனர். ஆனால், சிறுத்தையை பிடிப்பதில் மெத்தனமாக இருக்கின்றனர் என்றார்.
இது தொடர்பாக வால்பாறை வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், கடந்த வாரம் வரை கோவில் திருவிழாக்கள் நடைபெற்றதால், பட்டாசு சத்தத்தில் சிறுத்தை கூண்டு வைக்கப்பட்ட பகுதிக்கு வரவில்லை. செவ்வாய்க்கிழமை இரவு நாயை தாக்கிய ஆற்றுப் பகுதியில் தற்போது கூண்டு வைக்க உள்ளோம். விரைவில் சிறுத்தை அகப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.