தமிழ்நாடு

நூற்றாண்டு பழம் பெருமை வாய்ந்த மதுரை தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரியம் காப்பாற்றப்படுமா?

நிர்வாக ரீதியில் ஏற்பட்ட தனிப்பட்ட கெüரவப் பிரச்னையால் பாரம்பரியமிக்க மதுரை தமிழ்ச் சங்கம், அதைச் சார்ந்த செந்தமிழ்க் கல்லூரியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜெயப்பாண்டி

நிர்வாக ரீதியில் ஏற்பட்ட தனிப்பட்ட கெüரவப் பிரச்னையால் பாரம்பரியமிக்க மதுரை தமிழ்ச் சங்கம், அதைச் சார்ந்த செந்தமிழ்க் கல்லூரியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் கடந்த 1901-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 3 நாள் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர், தமிழ் மொழி நிலை பெற்று வளர தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும் என்றார். இதையடுத்து, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூடிய தமிழ்ச் சான்றோர் தமிழ்ச் சங்கத்தை அமைக்கத் தீர்மானித்தனர்.

அதன்படி, 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரை தமிழ்ச் சங்கம் உருவானது. அதன் நிறுவனராக பொன்.பாண்டித்துரைத் தேவரும், தலைவராக மன்னர் பாஸ்கர சேதுபதியும் இருந்தனர். பாஸ்கர சேதுபதி ரூ.10 ஆயிரத்தை தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க, பாண்டித்துரைத் தேவர் தனது ஜமீனை விற்று சங்கத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

பழைய தமிழ் நூல்கள் புதுப்பிக்கப்படவும், ஓலைச்சுவடிகள் காப்பாற்றப்படவும், தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையிலும் செயல்முறைகள் தீர்மானிக்கப்பட்டன.

இந்தச் சங்க வெளியீடாக தொடர்ந்துவரும் செந்தமிழ் இதழில்தான் பரிதிமாற்கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக்கோரி கட்டுரை எழுதினார். இந்தச் சங்கம் 1908-இல் முறையாக அரசிடம் பதிவு பெற்றது.

சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான செந்தமிழ்க் கல்லூரி 1957-இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தமிழ்ப் புலவர் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.

தற்போது, தமிழ் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளுடன், சம்ஸ்கிருதம், கணினிவழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சி, ஓலைச்சுவடி ஆய்வு ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 1981-இல் மதுரையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவால் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருதும், ரூ.5 லட்சம் நிதியும் முதன்முறையாக வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 2007 முதல் தமிழ்ச் சங்கம், கல்லூரியில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் வாரிசுகளுக்கும், கல்லூரி நிர்வாகத்தில் இருப்போருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், யார் பெரியவர்? என்ற கெüரவப் பிரச்னையுமே சங்கத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

தமிழ்ச் சங்க அலுவலகத்தை யார் நிர்வகிப்பது என்ற ரீதியில் தற்போது இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை செந்தமிழ்க் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ராஜா என்.குமரன் சேதுபதியிடம் கேட்டபோது, மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டோம். சங்கத்தின் கீழ் செயல்படும் கல்லூரி நிர்வாகத்தையும் சட்டரீதியாக விரைவில் சீரமைப்போம். எங்கள் செயல்பாடுகள் தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரியத்தைக் காப்பதாகவே அமையும் என்றார்.

செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ரா.குருசாமியிடம் கேட்டபோது, பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே, சட்டரீதியாகவே நாங்கள் அணுகி வருகிறோம் என்றார்.

"ஊருணி நீர்நிறைந்தற்றே உலகளவாம், பேரறிவாளன் திரு' என்றார் வள்ளுவர்.

அறவழியில் வந்தவர்கள் பெற்ற செல்வம் ஊருணி நீர் போல யாவருக்கும் பயன்படும் என்ற அந்தக் குறள் போலவே பாண்டித்துரைத் தேவரின் செல்வத்தாலே கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழை வளர்க்க தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது.

ஆனால், தனிப்பட்டோரின் சுய கெüரவத்துக்காக தமிழ்கூறும் நல்லுலகத்தின் வழிகாட்டியாகச் செயல்பட வேண்டிய தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரியத்துக்கு பாதிப்பு ஏற்படுவது சரியல்ல என்பதே நடுநிலையாளர் கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT