முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சாமி தரிசனம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

Updated On : 25 ஆகஸ்ட், 2015 at 7:17 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:02 PM

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரி வருகை தந்த அமித்ஷா கார் மூலம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்தார். காலை 10.30 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார். பாஜக மாநிலத் செயலாளர் சு.ஆதவன், மாவட்டத் தலைவர் ஜெ.சுகுமாரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் கோயில் பொதுதீட்சிதர்கள் அமித்ஷாவிற்கு பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோயிலில் அவர் பொன்னம்பல மேடையில் ஏறி சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து, அமித்ஷாவை பஞ்சாட்சர படியில் நிற்க வைத்து பொன்னாடை அணிவித்து கவுரவித்து சாமி பிரசாதங்களை வழங்கினர். பின்னர் அவர் ஸ்ரீதில்லைகோவிந்தராஜ பெருமாள் சந்நிதி, ஸ்ரீமூலநாதர் சந்திதி ஆகிய சந்திதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றார்.

Advertisement

இதனையடுத்து அமித்ஷா சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு சென்று அங்குள்ள ஸ்ரீசெளந்தராநாயகி உடனாகிய ஸ்ரீசிவலோகநாதரை தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி சென்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில அமைப்புச் செயலாளர் மோகன்ராஜூலு, இணை அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.வி.கண்ணன்பிள்ளை ஆகியோர் உடன் வந்தனர்.

கடைகள் அடைப்பு, கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் விஜயகுமார் தலைமையில் சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் கீழசன்னதி, மேலசன்னதி, வடக்குசன்னதி பகுதிகளில் அனைத்து கடைகளையும் போலீஸார் மூடச்சொன்னதால் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மேற்கண்ட சந்நிதிகள் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுத்த போலீஸாரின் கெடுபிடியால், கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதியுற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.