விருதுநகர் அருகே கார் பைக் மீது மோதி கடைக்குள் புகுந்தது: 2 பேர் படுகாயம்
விருதுநகர் அருகே பைக் மீது மோதிய கார் சாலையோரத்தில் இருந்த தேநீர் கடைக்குள் புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே பைக் மீது மோதிய கார் சாலையோரத்தில் இருந்த தேநீர் கடைக்குள் புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா(30). இவர் ச.ம.க கட்சி தலைவர் சரத்குமாரிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னையிலிருந்து கோவைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் சரக்குமார் வந்துள்ளார். அப்போது, தென்காசி செல்வதற்காக தனது காரை எடுத்து வரும்படி சத்யாவிடம் தெரிவித்தாராம். அதன் அடிப்படையில் இன்று பிற்பகலில் புதுப்பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு புறப்பட்டாராம்.
அப்போது, எம்.ஜி.ஆர். சாலை வளைவில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தேநீர் கடைக்குள் கார் புகுந்தது. இதில், கடையில் அமர்ந்திருந்த கட்டையாபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன்(21) மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகரைச் சேர்ந்த ஐயப்பன்(22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
தகவல் அறிந்த பஜார் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தேநீர் கடை மேற்கூரை மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை சேதமடைந்தன. இது தொடர்பாக பஜார் காவல் நிலைய போலீஸார் சரத்குமாரின் கார் டிரைவர் சத்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.