முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் கௌசிகா நதியை சீரமைப்பதற்கு ரூ.3 கோடி அரசு ஒதுக்கீடு

விருதுநகரில் கௌசிகா நதியின் சுகாதார பிரச்னைக்கு தீர்வு காணவும், குடிநீர் ஆதாரம் மற்றும் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்காக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் இன்று தெரிவித்தார்.

Updated On : 30 ஆகஸ்ட், 2015 at 7:57 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:04 PM

விருதுநகரில் கௌசிகா நதியின் சுகாதார பிரச்னைக்கு தீர்வு காணவும், குடிநீர் ஆதாரம் மற்றும் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்காக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் இன்று தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்துள்ளது. எனவே கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலன கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். சில பணிகளுக்கு அரசாணையும் பெற்று பணிகள் தொடங்க இருக்கிறது. இத்தொகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயன்படும் வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் பரவலாக அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாலை, கழிவு நீர் வாய்க்கால் வசதி ஆகியவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல், பெரிய திட்டங்களான கௌசிகா நதியை தூர்வாருவதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து மானியக் கோரிக்கையில் அரசு அறிவித்துள்ளது. வடமலைக்குறிச்சி கிராமத்தில் உருவாகி 15 கி.மீ தூரத்திற்கு ஓடி 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் இந்த ஆறு தூர்வாரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், விருதுநகரில் ஆத்துமேடு, பாத்திமாநகர், அய்யனார் நகர், அகமது நகர், பர்மாகாலனி, அன்னை சிவகாமிபுரம் போன்ற நகர்புற பகுதிகள் கடுமையாக சுகாதார கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் தூர்வாருவது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதனால் பொதுப்பணித்துறை மூலம் வடமலைக்குறிச்சி முதல் குல்லூர்சந்தை அணை வரையில் ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி பலப்படுத்துதல், தடுப்பணை மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

அதேபோல், விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆணைக்குட்டம் அணையை தூர்வாரி, மதகுகளை சரிசெய்வதற்கு ரூ.2.56 கோடியும், குல்லூர்சந்தை அணை தூர்வாரி புனரமைப்பு பணிகள் செய்வதற்கு ரூ.5.80 கோடியும், விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து நவீன வசதியுடன் செவிலியர் பயிற்சி பள்ளியில் மாணவியர் விடுதிக்கு ரூ.5.32 கோடியும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பணிகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கிறது.

இதேபோல், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.25 கோடியில் சாலைப்பணிகளும்,  நிகழாண்டில் சாலையை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற இருப்பதாகவும், மீதமுள்ள அடிப்படை வசதிப் பணிகள் நிகழாண்டிற்குள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.