வெள்ளத்தால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானவர்களை, பல்வேறு நாடுகளில் இருக்கும் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கண்டறிந்து கூறுமாறு, சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு வலியுறுத்தினர்.
இவ்வாறு கட்டுப்பாட்டு அறைக்கு 5 நாள்களில் 7 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. மேலும், அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் போலீஸார் அனுப்பினர்.
இதுகுறித்த விவரம்:
கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக, சென்னையில் டிச.1 ஆம் தேதி முதல் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கேற்றவாறு பெருநகர காவல்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
கட்டுப்பாட்டு அறை: முக்கியமாக, சென்னை பெருநகரக் காவல் துறையின் சார்பில், மழை தொடர்பான தகவலுக்கு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரத் தொலைபேசி எண் 100, செல்லிடப்பேசி எண் 95000 99100 ஆகியவற்றுடன் மழை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள 044-23452314 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டது. இந்த எண்களை இணையதளங்களிலும் சென்னை காவல்துறை விளம்பரப்படுத்தியது.
மீட்புப் பணியை விரைவுபடுத்துவதற்காக, மாநகராட்சி, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட 7 துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
வழக்கமாக ஓர் உதவி ஆணையர் தலைமையில் 20 போலீஸாருடன் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, வெள்ளம் காரணமாக கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம் தலைமையில் இரு துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள், 15 ஆய்வாளர்கள், 25 உதவி ஆய்வாளர்கள் என 100 பேர், 24 மணி நேரமும் பணியில் இருந்தனர்.
சென்னை மக்கள் இது வரை கண்டிராத வெள்ளத்தின் காரணமாக மின்சாரம், குடிநீர், தகவல் தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டன. வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், முடிச்சூர், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், மேற்கு சைதாப்பேட்டை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உறவினர்கள் கோரிக்கை: இதனால், இப் பகுதிகளில் வசிப்போரின் வெளிநாட்டு வாழ் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். செல்லிடப்பேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், அவர்கள் இங்குள்ளவர்களின் நிலையைப் பற்றி அறிய முடியாமல் தவித்தனர். இவர்களில் பலர், சென்னை பெருநகரக் காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, அவர்களைக் கண்டறிந்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனால், வெள்ளத்தில் சிக்கியிருக்கும் உயிருக்கு ஆபத்தான நபர்களை மீட்கும் பணிக்கு இடையே, இந்த நபர்களையும் கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாதாரண நாள்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகபட்சமாக 300 அழைப்புகளே வரும். ஆனால், வெள்ளம் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 7 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, மீட்கக் கோரியும், அத்தியாவசியப் பொருள்கள் கேட்டும் வந்துள்ளன.
மிகுந்த சவால்: இதற்கு அடுத்தபடியாக தங்களது குடும்பத்தினரையும், உறவினர்கள், நண்பர்களின் நிலையைக் கண்டறிந்து கூறும்படியும், அவர்களைக் கண்டறிந்து தரும்படியும் சுமார் ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதேபோல, 500 எஸ்.எம்.எஸ்.வந்துள்ளன.
இவற்றில் 40 சதவீதம் அமெரிக்கா, பிரிட்டன், அரபு நாடுகள், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தன. இவ்வாறு தொடர்பு கொண்டவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட முகவரிக்குச் சென்று, அங்கு அவர்களது குடும்பத்தினர் இருப்பதை மீட்பு படையினர் மூலம் உறுதி செய்தோம்.
பின்னர் அவர்களை, செல்லிடப்பேசி மூலம் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் பேச வைத்தோம். சில இடங்களில் செல்லிடப்பேசி தொடர்பு கிடைக்காததால், இங்கிருக்கும் குடும்பத்தினர் நலமுடன் இருப்பதை புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பினோம்.
இந்தப் பணி எங்களுக்கு மிகுந்த சவாலானதாக இருந்தது. ஏனெனில், பெரும்பாலானோர் அவர்கள் கூறிய முகவரிகளில் இல்லை, அருகில் இருக்கும் முகாம்கள், நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால், அவர்களைத் தேடிக் கண்டறிய போராட வேண்டியிருந்தது. ஆனால், அதையும் நாங்கள் சமாளித்தோம் என்றார்.
இந்த நடவடிக்கையினால் வெளிநாட்டில் வசிக்கும் நம் ஊர் மக்கள் நிம்மதி அடைந்ததோடு, இங்குள்ளவர்களையும் நாங்கள் வேகமாகக் கண்டறிந்து மீட்க முடிந்தது என மற்றொரு உயர் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.