பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்த விமர்சனத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காங்கிரஸ் மீதும், அதன் தலைவர் சோனியா காந்தி மீதும் பழி போட்டுப் பேசுவதை வாடிக்கையாக தமிழிசை சௌந்தரராஜன் கொண்டிருக்கிறார். மத்திய அரசு மீது விமர்சிக்கிற போதெல்லாம், அதற்குரிய பதிலைச் சொல்லாமல் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவது குறித்து பலமுறை விமர்சனம் செய்திருக்கிறோம்.
சர்ச்சையான கருத்து என்ன? மதுரையில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, "ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப ஒருவர் கூறுவதைப் போல, ஒரே நடன அசைவுகளைக் கொண்டு திரும்பத் திரும்ப ஆடுகிற கரகாட்டகாரர்கள், பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர்களைப் போல தமிழிசையின் கருத்து ஒரே மாதிரியாக இருக்கிறது' என மேற்கோள்காட்டிப் பேசினேன்.
தமிழிசை சௌந்தரராஜனையோ, அல்லது அத்தகைய ஆட்டத்தை ஆடுகிற கலைஞர்களையோ புண்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல.
தனிப்பட்ட முறையில் தமிழிசை சௌந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளேன். இதோடு, அவர் மீது அன்பையும், பாசத்தையும் வைத்துள்ளேன்.
ஒப்பீட்டை தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால், தமிழிசையின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
எனது பிறந்த நாளில் வாழ்த்துகள் கூறிய வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன், முகுல் வாஸ்னிக், வி.நாராயணசாமி, பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோருக்கு நன்றி என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.