தமிழ்நாடு

சுற்றுச்சூழலைப் பாதிக்குமா நியூட்ரினோ ஆய்வுக் கூடம்? தொடங்கியது பணிகள்: தொடரும் மக்களின் அச்சம்

தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அருகே அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ள நிலையில், ஆய்வுக் கூடத்தால் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் குறித்த அச்சமும் பொதுமக்கள் மத்தியில் தொடர்கிறது.

கோ.ராஜன்

தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அருகே அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ள நிலையில், ஆய்வுக் கூடத்தால் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் குறித்த அச்சமும் பொதுமக்கள் மத்தியில் தொடர்கிறது.

நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி, திட்டப் பணிகளுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உலக அளவில் 5-ஆவது நியூட்ரினோ ஆய்வுத் திட்டமாக, இந்திய அணுசக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து ஐ.என்.ஓ.,(ஐய்க்ண்ஹய்-க்ஷஹள்ங்க் சங்ன்ற்ழ்ண்ய்ர் ஞக்ஷள்ங்ழ்ஸ்ஹற்ர்ழ்ஹ்)அமைப்பு மூலம் செயல்படும் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு, முதலில் நீலகிரி மாவட்டம், சிங்காரா மலைப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. மத்திய சுற்றுச் சூழல், தமிழக வனத் துறை, கிராம மக்களின் ஆட்சேபணையால் இந்த இடம் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரம் கிராமத்தை அடுத்துள்ள, ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலை, தமிழக வனத் துறை அனுமதியுடன் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு தேர்வு செய்யப்பட்டது.

பிரபஞ்சம் குறித்த ஆய்வு: சூரியன், நட்சத்திரம் ஆகியவற்றில் இருந்து நியூட்ரினோ துகள்கள் இயற்கையாகவே உற்பத்தியாகி, பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலும் பரவிக் கிடக்கிறது. மிகக் குறைந்த வினைபுரியும் ஆற்றலுடைய, எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லும் தன்மையுடைய, நுண் துகளாக நியூட்ரினோ கருதப்படுகிறது.

நியூட்ரினோ நுண் துகள்களை, மலைக் குகைக்குள் கொண்டு சென்று, மின் காந்தக் கருவியில் விழச் செய்து, ஆய்வு செய்வதே நியூட்ரினோ ஆய்வுக் கூடப் பணிகள். இந்த ஆய்வின் மூலம் பிரபஞ்சத்தை முழுமையாக அறிந்து கொள்ளவும், இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடையப்படும் அம்பரப்பர் மலை: நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக, அம்பரப்பர் மலை செங்குத்தாக 1.3 கி.மீ., ஆழம் வரை துளையிடப்பட்டு, 80 அடி அகலத்துக்கு மலைக் குகை அமைக்கப்படும். இந்த மலைக் குகையில் 50 ஆயிரம் டன் எடையுள்ள மின் காந்தக் கருவி பொருத்தப்படும். மலையின் பக்கவாட்டில் இருந்து 25 அடி அகலத்துக்கு 2 கி.மீ., தூரம் வரை குடையப்பட்டு, அங்கு 38 அடி அகலத்தில் ஆராய்ச்சிக் கூடத்துக்கான மலைக் குகை அமைக்கப்படும்.

தற்போது நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பகுதியில் சுற்று வேலி, குடிநீர் தொட்டி, பாலம், சாலை அமைத்தல் ஆகிய பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

எதிர்ப்பலைகள்: நியூட்ரினோ ஆய்வுக்கூடம் குறித்து கிராம மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் தொடர்கிறது.

அடர்ந்த வனப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் அணுத் துகள் ஆய்வு மையம் அமைக்க பல்வேறு அமைப்புகளும், கிராம மக்களும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து டி.ரங்கநாதபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.திருப்பதிவாசகம் கூறுகையில், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைய உள்ள பகுதியில் வனத் துறையினர் தற்போதே கெடுபிடியைத் தொடங்கி விட்டனர். மலையைக் குடைவதற்கு வெடி வைப்பதிலும், இயந்திரங்கள் மூலம் துளையிடுவதிலும் சுற்றுச் சூழலும், பொதுமக்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு நிர்வாகி தேவாரம் முருகன் கூறுகையில், நியூட்ரினோ ஆய்வுக்கூட திட்டம் அணுக்கழிவு சேமிப்பு திட்டமாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், மலையைக் குடைந்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதால் சுற்றுச் சூழல் மாசுபடும்.

மலையைக் குடையும் போது, 2.25 லட்சம் கனமீட்டர் பாறை, பாறை சிதறல்கள் வெளியேறும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கழிவுகள் இங்குள்ள விவசாய நிலங்களில் பரவி சாகுபடிக்கு தகுதியற்றவையாக மாறிவிடும். பொதுச் சுகாதாரம் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

அன்று முதல் இன்று வரை...

அன்று முதல் இன்று வரை...2011, பிப்பவரி 24    நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு பொட்டிப்புரம் அருகே இடம் தேர்வு.

2011, நவம்பர் 30    ஆய்வுக் கூடத்துக்கு மாநில அரசு நிலம் ஒப்படைப்பு.

2012, செப்டம்பர் 6    பாபா அணு ஆய்வு மையம் (ஆஅதஇ) மூலம் 50 ஆயிரம் டன் எடையுள்ள மின்காந்தக் கருவி தயாரிப்புக்கு அரசு ஒப்புதல்.

2012, டிசம்பர் 6    ஆய்வுக் கூடத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

2013, மே 8    கட்டுமானப் பணிகளுக்கு மத்திய சுற்றுச் சூழல், வனத் துறை ஒப்புதல்.

2014, பிப்ரவரி 3    101-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு.

2015, ஜனவரி 5    நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT