முகப்பு
தமிழ்நாடு

என்னதான் நடக்கிறது இலங்கையில்...? தீர்மானிக்கப் போவது சிங்களர்கள்

கடந்த தேர்தல் முடிவுகளை, சிறீசேனாவின் வெற்றி என நோக்குவதைவிட, ராஜபட்சவின் அராஜகத்துக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் கருத வேண்டும்.

Updated On : 20 ஜூலை, 2015 at 12:24 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:31 AM

கடந்த தேர்தல் முடிவுகளை, சிறீசேனாவின் வெற்றி என நோக்குவதைவிட, ராஜபட்சவின் அராஜகத்துக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் கருத வேண்டும். உண்மையில், ராஜபட்சவின் ஒன்பது வருட ஆட்சி, தமிழ் மக்களை மட்டும் அடிமைப்படுத்தவில்லை. அது சிங்கள மக்களையும் அடிமைப்படுத்த முயற்சித்தது. இதனால், குறிப்பிட்ட பிரிவு சிங்கள மக்கள் ராஜபட்சவின் ஆட்சி மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால், "பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டவர்', "துட்டகைமுனு மன்னனுக்குப் பிறகு இலங்கையை ஒன்றாக ஆட்சி செய்தவர்' என்பது போன்ற சில உணர்வுகள் சிங்கள மக்களிடையே ஏற்பட்டன. ஆனாலும், மாற்றம் வேண்டிய சிங்கள மக்கள்- குறிப்பாக இளம் தலைமுறையினர் சிறீசேனாவுக்கு வாக்களித்தனர்.
 கடந்த தேர்தலுக்கு முந்தைய நாளில் கூட, சிறீசேனாவும், ராஜபட்சவும் சிங்கள மக்களிடையே ஏறத்தாழ சமமான செல்வாக்கையே பெற்றிருந்தனர். ராஜபட்ச இன்னும் கொஞ்சம் கூடுதலான செல்வாக்குடன் இருந்தார் என்பதுதான் உண்மை. இந்நிலையில், இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இலங்கையின் அதிபரைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறின. இதை சிறுபான்மையினரே எதிர்பார்க்கவில்லை.
 கடந்த தேர்தலில் சிறீசேனா வெற்றி பெற்ற இடங்களை தனிப்படுத்திக் காட்டினால் அது "தமிழ் ஈழ' வரைபடம் போல இருக்கும். தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் வெஞ்சினத்துடன் ராஜபட்ச சொன்னார், "தமிழர்கள் என்னைத் தோற்கடித்து விட்டார்கள்' என்று. அது உண்மையும் கூட.
 மீண்டும் ராஜபட்ச ஆட்சிக்கு வராமல் இருப்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் எடுத்து வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. கடந்த தேர்தலைப்போல இதிலும் ராஜபட்ச தோல்வியைத் தழுவுவார் என முதல்முறையாக அண்மையில் வாய் திறந்துள்ளார் சிறீசேனா. நிர்பந்தங்களுக்குப் பணிந்தே ராஜபட்சவுக்கு வாய்ப்பு வழங்கியதாகத் தெரிவித்த அவர், கடந்த தேர்தலைப்போல இந்தத் தேர்தலிலும் அவர் மண்ணைக் கவ்வுவார் என்று கூறியுள்ளார்.
 இலங்கையின் புவியியல் முக்கியத்துவம்
 அமெரிக்கா, இந்தியா, சீனா உள்பட உலகத்தின் எல்லா பெரிய நாடுகளும் இலங்கை மீது கண் வைப்பதற்கு, அதன் புவியியல் ரீதியான முக்கியத்துவம்தான் பிரதான காரணமாகிறது. இலங்கையில் இருந்து கொண்டு ஒட்டுமொத்த இந்து மகா சமுத்திரப் பகுதிகளையும் இலகுவாகக் கண்காணிக்கலாம்.
 முந்தைய இலங்கை அதிபர்கள் அனைவருமே இந்தியச் சார்பு நிலையையோ அல்லது அமெரிக்கச் சார்பு நிலையையோ எடுத்தனர். ஆனால், முதல்முறையாக சீனா சார்பு நிலையை தனது ஆட்சிக் காலத்தில் எடுத்தார் மகிந்த ராஜபட்ச. சீனாவும் அதிக நிபந்தனைகளை விதிக்காமல், அதாவது இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடாமல், இலங்கையில் தனது களத்தை உருவாக்கி, அதன்மூலமாக ஒட்டுமொத்த இந்து மகா சமுத்திரப் பகுதியையும் கண்காணிக்க விரும்பியது. ராஜபட்சவின் சீனச் சார்பால் அவருக்கும் இலங்கைக்கும் பல நன்மைகள் கிடைத்தன. குறிப்பாக, போரால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருந்த இலங்கைக்கு சீனாவின் உதவிகள் வரப்பிரசாதமாக மாறின.
 இந்த உதவிகளின் துணையுடன், வரலாறு காணாத அளவுக்கு உள்கட்டுமானங்களையும் குளங்கள், சாலைகள், மின் இணைப்பு, பள்ளிகளின் நிர்மாணம், மருத்துவமனைகளின் புனரமைப்பு என அடிப்படை வசதிகளை மிகத் தரமாகவும் விரைவாகவும் செய்தார் ராஜபட்ச. பல லட்சம் கோடிகளை இலங்கையில் சீனா முதலீடு செய்ததற்கு, ராஜபட்ச மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையே காரணமாக அமைந்தது. ஆனால், இந்தப் புனரமைப்புகள் எல்லாமே சிங்களப் பகுதிகளில்தான் மேற்கொள்ளப்பட்டன.
 தேர்தலின்போது திடீர்த் தயாரிப்பான சிறீசேனா களமிறக்கப்பட்டார். அவர் ஒரு திடீர்த் தயாரிப்பு என்பதால், நெளிவு சுளிவுகள் நிறைந்த இலங்கை அரசியலில் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு பக்கத்தில் தனது வெற்றிக்காகப் பாடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலை சிறீசேனாவுக்கு இருந்தது. மறுபக்கத்தில் தன்னுடைய கட்சியான சுதந்திரக் கட்சியை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை இலகுவாக சமாளித்த அவரால், ராஜபட்சவின் விசுவாசிகள் நிறைந்த தனது சொந்தக் கட்சியான சுதந்திரக் கட்சியையும், அது அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் நிர்வகிப்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
 அமெரிக்க ஒப்பந்தம்?
 அதேவேளையில், ராஜபட்சவின் தோல்வியை அடுத்து, அவரது சகோதரர் பஸில் ராஜபட்ச அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கே அமெரிக்கத் தரப்பினரோடு பேசி ஓர் உடன்படிக்கைக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். எவரையும் வளைத்துப் போடக் கூடிய வல்லமையுடைய பஸிலால் அமெரிக்காவையும் சமநிலைப்படுத்தக் கூடிய விதமான ஓர் ஒப்பந்தம் உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்தே ராஜபட்ச களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது கொழும்பில் பரவலாகப் பேசப்படும் வதந்தி.
 அதிபர் தேர்தல் போலல்லாமல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் விருப்பங்களே அதிக அளவில் பிரதிபலிக்கும் என்பதால், மகிந்த ராஜபட்ச கணிசமான அளவுக்கு செல்வாக்கைப் பெறுவார் என்றே இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 225 உறுப்பினர்கள் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு வெறும் 40-க்கும் குறைவான உறுப்பினர்களே உள்ளனர்.
 நீண்ட நாள்களுக்குப் பிறகு, இந்தத் தேர்தல்தான் ராஜபட்ச- ரணிலுக்கான நேரடிப் போட்டியாக இருக்கப் போகிறது என்பதனால் இந்தத் தேர்தல் களைகட்ட ஆரம்பித்து விட்டது.
 கடந்த அதிபர் தேர்தல் போல, சிங்கள மக்கள் இருவருக்கும் சமமாக வாக்களித்தால், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் சிறுபான்மையினர் உருவாகலாம். சிங்கள மக்கள் பெருவாரியாக மீண்டும் மகிந்த ராஜபட்சவை ஆதரிக்கத் தீர்மானித்தால், சிறீசேனாவுக்கும், ரணில் விக்ரம சிங்கவுக்கும், சிறுபான்மைத் தமிழர்களுக்கும் எதிராக அலை வீசத் தொடங்கும். அதிபர் தேர்தல் போலல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலில், தொகுதி வாரியாக வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில், இந்தத் தேர்தலில் முடிவைத் தீர்மானிப்பது சிங்களர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 (நிறைவு)
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.