முகப்பு
தமிழ்நாடு

மாணவர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கலாம்!

நேற்றைய இந்திய சுதந்திரகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அதன் பக்கங்களில் தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி போன்றோரின்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

நேற்றைய இந்திய சுதந்திரகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அதன் பக்கங்களில் தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி போன்றோரின் பெயர் மேலோங்கி இருக்கும். ஆனால், தற்கால இந்திய சரித்திரத்தைப் புரட்டினால் அதில் கலாம் என்ற வார்த்தையும் வைரம்போல் பதிந்திருக்கும்.
 குறிப்பாக தற்போதைய தலைமுறையாக இருந்தாலும் சரி, இனி வருங்காலத் தலைமுறைகளாக இருந்தாலும் சரி மாணவர்களின் நெஞ்சங்களில் காலம்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆலய மணியாக கலாமின் பெயர் நீடித்திருக்கும் என்றால் அது மிகையல்ல.
 குழந்தைகளின் "மாமா'வாக முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பெயர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் மத்தியில் பெயர் பெற்றதாக இருந்தது. ஆனால், அதையும் தாண்டிய வகையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தலைவராக மிளிர்ந்தவர் அப்துல் கலாம் என்றால் அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதர்சனம்.
 பாரத தேசத்தின் தென் கோடியில் ஒரு ஏழை படகோட்டி மகனாக பிறந்து, செய்தித் தாள் விற்கும் சிறுவனாக, அரசுப் பள்ளி மாணவராக வாழ்க்கையைத் தொடங்கியவர் கலாம்.
 இந்தியாவின் அறிவியல் துறையை உலகின் வல்லரசு நாடுகள் திரும்பிப் பார்க்கும் மகோன்னத நிலைக்கு கொண்டு சென்ற ஒரு அணு விஞ்ஞானியாக உயர்ந்தவர்.
 காட்சிக்கு எளியவராகவும், நேர்மையாளராகவும் திகழ்ந்தவர். அலங்காரப் பதவியாக பலராலும் கருதப்பட்ட குடியரசுத் தலைவர் பதவிக்கு நாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தவர். குடியரசுத் தலைவராக இருந்த போது, "நாட்டின் முதல் குடிமகன்' என்ற பெருமையை உணர்ந்து, அதற்கேற்ப தனது பணிகளை செயல்படுத்தியவர்.
 நாட்டின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் வாக்காளர்கள் மட்டுமல்ல; மாணவர்களும்தான். சிறந்த தேசத்தை உருவாக்கும் மன்னர்கள்தான் மாணவர்கள் என்று நினைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி, அவர்களது அறிவியல் தாகத்தை கிளர்ந்தெழச் செய்தார். இதற்காக கிராமம், நகரம், குக்கிராமம் என நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அயராமல் சென்று அறிவுத் தாகம் தீர்த்தவர்.
 மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வார்த்தைகளை மட்டும் அளிக்காமல், தன்னம்பிக்கை டானிக், எவ்வாறு தன்னை சாதாரண நிலையில் இருந்து நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவி வரை உயரச் செய்தது என்று உண்மை உதாரணங்கள் மூலம் விளக்கியவர்.
 நேர்மையின் சிகரம்: அப்துல் கலாம் எளிமையானவர். பண்பாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் மிக நேர்மையாளர் என்பதுதான் அவரது பல வெற்றிகளுக்கும் அடித்தளமிட்டது பலரும் அறிந்திராத ஒன்று. பரிசுப் பொருளே வாங்க விரும்பாதவர். தான், தனது குடும்பம் என்ற சிந்தனை துளியும் இல்லாதவர். எப்போதும் தேச வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றையே தனது நோக்கமாகவும் மூச்சாகவும் கொண்டு பாடுபட்டவர்.
 குழந்தைகள் மீது நேசம்: திருமணம் செய்துகொள்ளாமல் தனது வாழ்வை முழுவதும் அறிவியல் பணிக்கும், தேச வளர்ச்சிக்கும் அர்ப்பணித்த கலாம், குழந்தைகளை மிகவும் நேசித்தவர். பாரதத்தின் வளர்ச்சிக்கு பெரியவர்கள் குறைந்த அளவே பங்களிக்க முடியும். ஆனால், வளரும் தலைமுறையினரான குழந்தைகள் நாட்டை வல்லரசாக்க முடியும் என்று கருதியவர்.
 அதனால்தான் குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவர்களிடம் அறிவியல் தாகத்தை ஏற்படுத்தியவர்.
 உலக சரித்திரத்தில் இந்தியா பல வரலாறுகள் படைக்கும். அந்த வரலாற்றின் பக்கங்களில் இந்தியர்கள் இருப்பார்கள். அவர்களின் கிரியா ஊக்கியாக அப்துல் கலாம் உருவாக்கிய எண்ணங்கள் இருக்கும் என்றால் அதுதான் யதார்த்த உண்மை...!
 சுஜாதாவும், கலாமும் ஒன்றாகப் படித்தவர்கள்
 மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமும், எழுத்தாளர் சுஜாதாவும் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்.
 திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்ஸி. இயற்பியல் (1952-54) பட்டப் படிப்பில் அப்துல் கலாமும், சுஜாதாவும் ஒன்

றாகப் படித்தனர். அதைத் தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் "ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங்' படிப்பை 4 ஆண்டுகள் இணைந்து படித்துள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments