தமிழ்நாடு

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அஞ்சலக ஊழியர்களுக்கு பயிற்சி: கோவை, திருப்பூரிலும்...

பார்சல் சேவை மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அஞ்சலக, தனியார் "கூரியர்' ஊழியர்களுக்கு

கே.வாசுதேவன்

பார்சல் சேவை மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அஞ்சலக, தனியார் "கூரியர்' ஊழியர்களுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.
 சென்னையில் இரவு கேளிக்கை நிகழ்ச்சிகள், பப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தும் கும்பல் இயங்குகிறது.
 இந்தக் கும்பலை கண்டறிந்து கைது செய்ய, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் போதைப் பொருள்களை புதுப் புது வழிகளில் கடத்தப்படுவது மிகப் பெரிய சவாலாக இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் தயாரிக்கப்படும் கோக்கைன், பிரவுன்சுகர், சுடோஎபடரின், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் துறைமுகங்கள் வழியாகவும், விமானங்கள் மூலமாகவும் சென்னைக்கு கடத்தப்பட்டன.
 இந்த நிலையில், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து அஞ்சல், "கூர்யர்' மூலம் "உயிர் காக்கும் மருந்து', கணினி உதிரி பாகங்கள், உணவுப் பொருள்கள் என்ற பெயர்களில் இப்போது போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன.
 அஞ்சலக, "கூரியர்' ஊழியர்கள் இவற்றை முறையாக சோதனை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது கடத்தல்காரர்களுக்குச் சாதமாக அமைகிறது. எளிதாக இந்த வழிகளில் போதைப் பொருள்களை கடத்துகின்றனர்.
 இவ்வாறு பார்சல் சேவை மூலம் எளிதாக போதைப் பொருள் கடத்தப்படுவதை மத்திய போதை தடுப்புப் பொருள் பிரிவு போலீஸார் அண்மையில் கண்டறிந்தனர்.
 குறிப்பாக அம்பத்தூர் அஞ்சல் நிலையத்தில் இருந்து நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஹென்றி சித்தி என்பவர் துணிக்குள் மறைத்து வைத்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சுடோஎபடரின், ஹெராயின் ஆகிய போதைப் பொருள்களை சில மாதங்களுக்கு முன்பு அனுப்ப முயன்றபோது மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இச் சம்பவத்துக்கு பின்னரே போதைப் பொருள் கடத்தும் கும்பல் தங்கள் வழியை முழுமையாக மாற்றியிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது.
 பயிற்சி வகுப்பு: இதனைத் தொடர்ந்து இந்தத் துறைகளிலும் போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 இதன் ஒரு பகுதியாக அஞ்சலக, "கூரியர்' ஊழியர்களுக்கு போதைப் பொருள்களைக் கண்டறிவது குறித்தும், போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பயிற்சி அளிக்க மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தென் மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா முடிவு செய்தார்.
 அதன்படி, சென்னையில் உள்ள அஞ்சலக, "கூரியர்' ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இரண்டு மணி நேர வகுப்பாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. போதைப் பொருள் எந்ததெந்த நாடுகளில் இருந்து எந்ததெந்த நாடுகளுக்கு கடத்தப்படுகிறது, பார்சல்களில் போதைப் பொருள்களை கடத்துவதற்கு எப்படிப்பட்ட உத்தியைக் கையாளுகின்றனர், பார்சலுக்குள் இருக்கும் போதைப் பொருளை எப்படி கண்டறிய வேண்டும், சந்தேத்துக்குரிய வகையில் இருக்கும் பார்சலை முழுமையாக ஸ்கேன் செய்ய வேண்டும், அதில் சந்தேகம் இருப்பின் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும், தகவல்களும் அளிக்கப்படுவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தென் மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.
 இதுவரை 100 பேருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் பல ஊழியர்களுக்கு இந்தப் பயிற்சியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் பார்சல் சேவை மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதை ஓரளவுக்கு தடுக்க முடியும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பார்சல் சேவை மூலம் போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்குரிய வாய்ப்பு அஞ்சல், "கூரியர்' ஊழியர்களின் கைகளில்தான் இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
 பார்சல் சேவை மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க கோவை, திருப்பூரிலும் அஞ்சலக, "கூரியர்' ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
 தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோக்கைன், பிரவுன்சுகர், சுடோஎபடரின், ஹெராயின் ஆகிய பொருள்கள் அதிகமாக கோயம்புத்தூர், திருப்பூருக்கே கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
 சென்னையில் உள்ள அஞ்சலக, "கூரியர்' ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது போன்று, கோவை, திருப்பூரிலும் பயிற்சி அளிக்க மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
 சென்னையில் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், கோவை, திருப்பூர் அஞ்சல், "கூரியர்' ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்த உள்ளதாக அப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT