காளமேகப் புலவருக்கும், ஒளவையாருக்கும் தமிழ் கற்றுக் கொடுத்த ஊர் நாகப்பட்டினம் என்றார் நாகூர் தமிழ்ச் சங்க நெறியாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாகப்பட்டினம் பதிப்பு தொடக்க விழாவில் அவர் வாழ்த்திப் பேசியதாவது:
தங்கு தடையின்றி அன்னக்கொடி நாட்டிய ஊர் நாகப்பட்டினம் என்று நாகைக்கென்று ஒரு சிறப்புண்டு. இதில் குறைபாடு உண்டு என்று 1,000 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பாடல் திரட்டில் ஒரு கவிஞர் பாடினார்.
காளமேகப் புலவர் ஒரு நாள் பசியில் இருந்தபோது சிறுவன் ஒருவனிடம் சோறு எங்கு விற்கும் என்று கேட்க, அச்சிறுவனோ சோறு தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினான். இதில் ஆத்திரமடைந்த காளமேகப் புலவர் நாக்குத் தடுத்து விளையாடும் நாகை பாலகனுக்கு என்று கோபத்தில் பாடல் எழுதி, பிறகு உணர்ந்த காளமேகப் புலவர் நற்றமிழ் வளர்க்கும் நன்னாள் என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.
ஒளவையார் நாவல் மரங்கள் நிறைந்த நாகப்பட்டினத்தில் ஒரு முறை சிறுவன் ஒருவனிடம் நாவல் பழம் வேண்டுமென்று கேட்க, அச்சிறுவனோ சுட்டப்பழம் வேண்டுமா, சுடாதப் பழம் வேண்டுமா என்று கேட்டான். ஒüவையோ சுடாதப் பழம் கேட்டார். சிறுவன் நாவல் மரக்கிளையை பிடித்து உலுக்கியபோது, பழுத்த பழங்கள் மண்ணில் விழுந்தன. கீழே விழுந்து கிடந்த ஒரு நாவல் பழத்தை ஒüவை எடுத்து, அதில் ஒட்டியிருந்த மண்ணை ஊதியபோது, அச்சிறுவனோ சுடாதப் பழம் கேட்டீர்கள்; இந்தப் பழம் சுடுகிறதா எனக் கேட்டான். அச்சிறுவனின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து ஒüவை பாராட்டினார். இதன்மூலம் காளமேகப் புலவருக்கும், ஒளவையாருக்கும் தமிழ்க் கற்றுக் கொடுத்த ஊர் நாகப்பட்டினம்.
இசைத் தமிழ், இயற்றமிழ், நாடகத் தமிழ், நாட்டியத்தமிழ், பக்தி, சங்க இலக்கியம் அனைத்திலும் கால் பதித்த தினமணி நாகப்பட்டினத்தில் பதிப்பு தொடங்கியுள்ளது ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரியது. நாகப்பட்டினத்தில் பதிப்பு தொடங்கியுள்ள தினமணி தமிழ் ஆய்வுப் பணியை மேலும் வளர்த்துக் கொடுக்க வேண்டும். தமிழ் என்றும் தமிழார்ந்த தமிழாய் இருக்க வேண்டும் என்றார் நிஜாமுதீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.