முகப்பு
தமிழ்நாடு

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் பள்ளி உதவிக்கரம்!

மழை வெள்ளத்தால் வீடுகள் சூழ்ந்திருந்தால், குடும்பத்துடன் பள்ளியில் வந்து தங்கிக் கொள்ளலாம் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

மழை வெள்ளத்தால் வீடுகள் சூழ்ந்திருந்தால், குடும்பத்துடன் பள்ளியில் வந்து தங்கிக் கொள்ளலாம் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
 வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டால், பொது மக்கள் அடைக்கலம் தேடி மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில்தான் தங்குவர். இதுவரை எந்தத் தனியார் பள்ளிகளும் அவசரத்துக்கு இவ்வாறான உதவிகளை செய்ததாகத் தகவல் இல்லை.
 வெள்ளம் வடியும் வரை அனைத்து வசதிகளும் உண்டு! இந்த நிலையில், சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள எவர்வின் மேல்நிலைப் பள்ளியானது தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு உதவிக் கரம் நீட்ட முன் வந்துள்ளது. கொளத்தூரில் பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதையடுத்து, மாணவர்களின் வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தால், பள்ளியில் வந்து தங்கிக்கொள்ளலாம் என்ற குறுஞ்செய்தியை பெற்றோருக்கு அனுப்பியுள்ளது.
 அதாவது, "உங்கள் வீடு வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தால் பள்ளியில் வந்து தங்கிக் கொள்ளலாம். இங்கு மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்து வசதிகளும் உள்ளன. வெள்ள நீர் வடியும் வரை தங்கிக் கொள்ளலாம்' என்ற குறுஞ்செய்தி பெற்றோர்களுக்கு சென்றது.
 10,250 மாணவர்களின் குடும்பத்தினருக்கு 3 முறை தகவல்கள்: இதுகுறித்து பள்ளியின் தாளாளர் பி.புருஷோத்தம்மன் கூறியதாவது:
 மழை பெய்யும்போது, கொளத்தூரிலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் எங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பாதிப்படைவர் எனத் தெரியும். பள்ளியில் பயிலும் 10,250 மாணவர்களின் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்களுக்கு இரண்டு முறை வாய்ஸ் மெயில் அனுப்பினோம். பின்னர் குறுஞ்செய்தி அனுப்பினோம்.
 இதில், "இந்தப் பள்ளி உங்கள் பணத்தால் உருவாகிய பள்ளி. தங்களது வீடு மழை நீரால் பாதிக்கப்பட்டிருந்தால், பள்ளியில் வந்து தங்கிக்கொள்ளுங்கள். பள்ளிக்கு வரும்போது மாணவரின் பள்ளி அடையாள அட்டையை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. மழைநீர் வடிந்த பிறகு பள்ளியில் இருந்து வெளியேறலாம்' என்ற செய்தியைத் தெரிவித்தோம். பள்ளியில் 300 வகுப்பறைகள் உள்ளன, அவற்றில் 142 குளிர்சாதன வசதி கொண்டவை. இதுவரை 5 குடும்பத்தினர் பள்ளியில் வந்து தங்கியுள்ளனர் என்றார் புருஷோத்தம்மன்.
 "வந்தோம்; உதவினர்; சென்றோம்': இது குறித்து பள்ளியில் தங்கியுள்ள சரவணன் கூறியதாவது: நாங்கள் வசிக்கும் பூம்புகார் நகர் மழை நீரால் சூழ்ந்துள்ளது. இதனால், குடும்பத்துடன் பள்ளியில் வந்து தங்கினோம். இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. மழைநீர் ஓரளவு வடிந்த பின்னரே வீடு திரும்பினோம் என்றார்.
 "நிவாரண முகாம்களான அரசுப் பள்ளிகள்'
 கடந்த 2 வாரங்களாகப் பெய்துவரும் தொடர் மழையால், சென்னையின் புறநகர்ப் பகுதிகளும், பெரம்பூரின் சில பகுதிகளும், அகரம், பெரியார் நகர், ஜவஹர் நகர், திருவிக நகர், கொளத்தூர், குமரன் நகர், செந்தில் நகர், ரெட்டேரி, பூம்புகார் நகர், விநாயகபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
 இதன் காரணமாக, சென்னையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழைப் பாதிப்பிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments