முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே மதபோதகர் கொலைச்சம்பவம் குறித்து  8 பேரிடம் போலீஸார் விசாரணை

விருதுநகர் அருகே மதபோதகர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதன்கிழமை ஆமத்தூர் போலீஸார் 8 பேரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Updated On : 9 செப்டம்பர், 2015 at 8:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:10 PM

விருதுநகர் அருகே மதபோதகர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதன்கிழமை ஆமத்தூர் போலீஸார் 8 பேரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் ரோசல்பட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் லூதர்(42). இவரது மனைவி ஜோசப்பின்(39). இவர்கள் இருவரும் எரிச்சநத்தம்-பேரையூர் சாலையில் தாழிக்குளத்துப்பட்டியில் நல்ல மேய்ப்பர் ஆலயம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ஆலயத்தில் ஆராதனை கூட்டம் முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ரோசல்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எரிச்சநத்தம்-செங்குன்றாபுரம் கிராமத்திற்கும் இடையே சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார்.

Advertisement

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் மர்ம கும்பலைச் சேர்ந்த 3 பேர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் சேதுராமன், செயலர் முத்துவேல் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நிலையில் தேடி வருகின்றனர். எனவே, இச்சம்பவத்தில் மல்லாங்கிணர் முருகன்(47), கெப்பிலிங்கம்பட்டி மகாலிங்கம்(37), சிலைமானைச் சேர்ந்த மகாபிரபு(19), ராஜபெருமாள்(52), தவமணி(19) ஆகியோர் வாகனத்தில் பின் தொடர்ந்து கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும்,  சிவகங்கை சந்தோஷ்ராஜ்(30), அவனியாபுரம் முத்துச்செல்வம்(20), சிலைமான் தமிழ்செல்வன்(30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொலை செய்ததாகவும் முதல் கட்ட போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள செயலர் முத்துவேலை கைது செய்தால் தான் கொலைக்கான காரணம், கூலிப்படைக்கு கொடுத்த பணம் ஆகியவை குறித்து விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.